ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் – மம்தா பானர்ஜி

கொல்கத்தா,

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது குறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் ஒரு புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர்! கிரிமினல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்காக தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் ஒரு புதிய வீழ்ச்சியை நாம் கண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.