தஞ்சாவூர் | இலவச மோட்டார் வாகனம் வழங்க மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர்: நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டார் பொருத்திய வாகனம் வழங்க வேண்டும் என்று தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் (பொறுப்பு) கோ.பழனிவேல் தலைமை வகித்தார், இதில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். அதில் மாற்று திறனாளிகள் வைத்த கோரிக்கைகள், “மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகள் வழங்கி காத்திருப்பதை தவிர்த்து, அதற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் அல்லது அவர்களை அலைக்கழிக்காமல், அதற்குண்டான பதிலைத் தெரிவிக்க வேண்டும், வீடில்லாதவர்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கவேண்டும்.

உதவித்தொகைக்காக 8 மாதங்களுக்கு மேலாக அலைவதைத் தவிர்க்க, அதனை வழங்கப்படும் குறிப்பிட்ட மாதத்தை மாவட்ட நிர்வாகம் கூற வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் நிறுவனத்தில் வழங்கப்படும் வேலையின் நேரத்தை குறைக்க வேண்டும், பல மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்த அளவே உதவித்தொகை வருவதையும், இவர்கள் பெயரில் வரும் தொகையை மற்றவர்கள் எடுப்பதையும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் வேலை வழங்க வேண்டும்.

மேலும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லை, பழுப்பு நிறத்தில் சாப்பிட முடியாத நிலையில் உள்ளதை ஆய்வு மேற்கொண்டு, தரமான அரிசியை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிக்கு வழங்கப்படும் ஆவின் பால் விற்பனை நிலையம் கேட்டு 2 ஆண்டுகளாகியும் காத்திருக்கின்ற சூழ்நிலையில், மாற்றுத் திறனாளிக்கான வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு, ஆவின் பால் விற்பனை நிலையம் அமைக்க ஆணை வழங்க வேண்டும். நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மோட்டார் பொருத்திய வாகனம் வழங்க வேண்டும்” என மாற்றுத் திறனாளிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.