சத்தீஸ்கர்: நீர்தேக்கத்தில் விழுந்த செல்போனை கண்டுபிடிக்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரி சஸ்பெண்ட்

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உணவுத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் ராஜேஷ் விஸ்வாஸ், கடந்த திங்கள்கிழமையன்று கேர்கட்டா என்ற நீர்தேக்கத்திற்குச் சென்றுள்ளார். நீர்தேக்கத்தை சுற்றிப் பார்த்த ராஜேஷ் விஸ்வாஸ், தனது விலையுயர்ந்த ஸ்மார்ட்போனில் செல்பி புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது செல்போன் நீர்தேக்கத்திற்குள் விழுந்துள்ளது.

இதனால் பதறிப்போன ராஜேஷ் விஸ்வாஸ், அங்கிருந்தவர்கள் சிலரிடம் தனது செல்போனை தேடி எடுத்துத் தருமாறு கேட்டுள்ளார். சுமார் 15 அடி ஆழ நீர்தேக்கத்திற்குள் விழுந்த போனை அங்கிருந்தவர்கள் தேடி பார்க்க முயற்சித்தனர். இருப்பினும் செல்போனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து ராஜேஸ், நீர்தேக்கத்தில் உள்ள நீரை எல்லாம் வெளியேற்றி தனது செல்போனை கண்டுபிடிக்க முடிவெடுத்தார். இதற்காக இரண்டு மோட்டார்களை வரவழைத்து தொடர்ந்து மூன்று நாள்கள் அவற்றை ஓட வைத்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளார்.

இந்த விவகாரம் நீர் மேலான்மை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் நேரில் வந்து ராஜேஷின் செயலை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் வெறும் 6 அடியாக குறைந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையானதைத் தொடர்ந்து அதிகாரி ராஜேஷை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.