சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம்: இரு விரல் சோதனை நடைபெறவில்லை – டிஜிபி உறுதி!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 130 சவரன் தங்க நகை மற்றும் 25 செல்போன்கள் , வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு.

சிதம்பரம் சிறுமி திருமணம்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு டிஜிபி சி.சைலேந்திரபாபு, “சிதம்பரம் சிறுமி திருமணம் வழக்கு மற்றும் விசாரணை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதன் செயலாளர் பதில் அளிப்பார்கள். தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு இருவிரல் சோதனை நடைபெறவில்லை” என்று கூறினார்.

சட்டம் ஒழுங்கு!

தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மேலும் தமிழகத்தில் பெரிய அளவிலான கலவரம், வட மாநிலத்தவர்கள் கொள்ளையில் ஈடுபடுவது மற்றும் சீரியல் தொடர் கொள்ளை போன்றவற்றை நடைபெறாமல் பாதுகாத்து வருகின்றோம்.

காலி பணியிடங்கள் இல்லாத நிலை!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்தாயிரம் போலீசார் புதிதாக நியமித்த நிலையில் தற்போது 3200 போலீசார் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு கட்டத்தில் போலீசார் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர் . இது மட்டுமின்றி தற்போது தமிழ்நாடு காவல்துறையில் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் போலீசார் நியமனம் செய்து வந்த நிலையில் காலி பணியிடங்கள் இல்லாத நிலை இந்த ஆண்டு உருவாகி உள்ளது.

சைபர் கிரைம்!

தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றத்தில் எதிர்பாராத குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. இதில் அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தொழிலதிபர்கள் வேலை தேடி அலையும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக போலீசார் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.