13 ஆயிரம் எஞ்சின்.. 65 இல் மட்டும்தான்.. மத்திய அரசே காரணம் – விவரிக்கும் சு. வெங்கடேசன்

13 ஆயிரம் ரயில் எஞ்சின்களில் 65 இன்ஜின்களில்தான் கவாச் கருவி பொறுத்தப்பட்டுள்ளதாக எம்பி சு. வெங்கடேசன் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விவரிக்கையில்; ஒடிசாவின் பகனகா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து விலை மதிக்க முடியாத மனித உயிர்களை பறித்துள்ளது. ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்துக்கு ரயில் தடம் புரண்டது, சிக்னல் கோளாறு என்ற இரண்டு வகையான காரணங்கள் வெளியாகி உள்ளன. எது உண்மையான காரணம் என்பதை கண்டறிய ஒரு நீதிபதியின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

விசாரணை கமிஷன்

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரனை செய்வது பாரபட்சமற்றதாக இருக்காது .1998-ல் இதே போன்ற விபத்துக்கள் ஏற்பட்டபோது அன்றைக்கு இருந்த வாஜ்பாய் அரசு நீதிபதி கண்ணா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமித்தது. அது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி காரணத்தையும் தீர்வையும் முன் வைத்தது .எனவே விசாரணை கமிஷன் நீதிபதியின் தலைமையில் அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இரண்டு காரணங்கள்

விபத்துக்கான இரண்டு காரணங்களும் முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. முதல் காரணம் ரயில் தடம் புரண்டதாகும். இரண்டாவது விவரப்படி சிக்னல் கொடுக்கப்பட்டும் பாயிண்ட் லூப் லைனுக்கு சென்று அங்கே நின்று கொண்டிருந்த சரக்கு வண்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதாவது சிக்னல் கோளாறு.

விபத்துக்கள் நிகழலாம்

சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்தபோது 2017ல் ரயில்வே பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அந்த வெள்ளை அறிக்கையில் அவர் இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் 4500 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் பழுதடைவதாகவும் ஆனால் நாம் புதுப்பிப்பது 2000 முதல் 2500 கி.மீட்டர்தான் என்றும் இதனால் புதுப்பிக்க வேண்டிய தண்டவாளங்களின் தூரம் ஏராளமாக நிலுவையில் உள்ளது .இது எப்போது வேண்டுமானாலும் விபத்துகளுக்கு வழி வகுக்கலாம். தண்டவாளம் தடம் புரண்டு இந்த விபத்துக்கள் நிகழலாம் என்று கூறினார். இவ்வாறு குறைவான தண்டவாளங்கள் புதுப்பிப்பது நிதி பற்றாக்குறையின் காரணமாகதான் என்று அவர் அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

குறைவான நிதி

சொன்னபடி தேய்மான நிதிக்கு 5000 கோடி ஒதுக்காமல் வெறும் 500 கோடியும் 300 கோடியும் தான் ஒதுக்கினார்கள். அதேபோல ரயில்வே அன்றாட வருமானம் 5000 கோடியை திரட்டுவதற்கு போதுமானதாக இல்லை .சென்ற ஆண்டு கணக்கெடுத்து பார்த்தால் நூறு ரூபாய் வருமானம் என்றால் 107 ரூபாய் செலவாகி இருக்கிறது. பல ஆண்டுகளாக உண்மை கணக்கை பார்த்தால் நிகர வருமானம் ரயில்வேக்கு கிடைக்கவில்லை.

கவாச் கருவி

கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட பெட்டிகள் மீதோ சரக்கு ரயில் மீதோ மோதுவதை தவிர்க்கும் வகையில் மோதல் தடுப்பு கருவி அந்த இன்ஜினில் பொருத்தி இருந்தால் அந்த என்ஜின் இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த கருவி இந்த வண்டியில் பொருத்தப்படவில்லை.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் (31-3-2022) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ரயில்வே ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த மோதல் தவிர்ப்பு கருவியை கவச் என்ற பெயரில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அறிவித்தார்கள். அந்த அறிக்கையின் படி 2022-ல் 65 இன்ஜின்களில்தான் அது பொருத்தப்பட்டிருந்தது. டீசல் இன்ஜின்கள் 4800 மின்சார எஞ்சின்கள் 8400 ஆக மொத்தம் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட என்ஜின்கள் இருக்க 65 இன்ஜின்களில் மட்டும் இது பொருத்தப்பட்டது என்பது மிகவும் கவலை அளிக்க கூடிய விஷயமாகும்.

அரசு தவறுதான்

இந்த விபத்து காரணம் என்ன என்பதை நீதிபதி கண்டறிவார் என்ற போதிலும் சில முக்கியமான அம்சங்கள் சுட்டிக் காட்டுவது என்னவென்றால் அரசு தவறுதான் இதற்கு பிரதான காரணம் என்று தெரிகிறது. டிரைவர்கள் காலியிடங்கள் ஏராளமாக இருப்பதால் டிரைவர்கள் ஓய்வில்லாமல் வேலை செய்வதாக ரயில்வே வாரிய தலைவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அந்த காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்திய ரயில்வேயில் 3 லட்சத்து 12 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல தண்டவாள பராமரிப்பு ஊழியர்களான டிராக் மேன்கள் 4 லட்சம் இருந்தது வெறும் 2 லட்சமாக குறைந்துவிட்டது. அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் விடப்படுகின்றன. இதுவும் விபத்துக்கு காரணமாகும்.

அது மட்டுமல்ல தங்க நாற்கரம் என்று சொல்லப்படுகிற சென்னை -மும்பை- டெல்லி- ஹௌரா- சென்னை என்கிற பாதை மொத்த தண்டவாளத்தில் 20 சதவீதம்தான். ஆனால் இதில் 55 சதவீதமான போக்குவரத்து நிகழ்கிறது. 100 வண்டிகள் செல்ல வேண்டிய இடத்தில் 130 ,150 வண்டிகள் செல்வதாக ரயில்வேயின் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. எனவே சரக்கு போக்குவரத்துக்கு தனி வழித்தடமும், பயணி வண்டிகளுக்கு தனி வழித்தடமும் அமைக்கப்பட வேண்டும். இதற்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

இன்றைக்கு சரக்கு வண்டிகள் சராசரியாக மணிக்கு 25 கிலோ மீட்டர் தான் செல்கின்றன. பயணி வண்டிகள் சராசரியாக 50 கிலோ மீட்டர் தான் செல்கின்றன. அதேபோல சரக்கு போக்குவரத்து தேசிய சரக்கு போக்குவரத்தில் 27 சதவீதம் தான் ரயில்வேயில் செல்கிறது. இதனை சரக்கு வண்டிகளின் வேகம் 50 கிலோமீட்டர் பயணிகள் வேகம் 130 கிலோமீட்டர் ஆகவும் சரக்கு போக்குவரத்தில் ரயில் பங்கு 45 சதவீதமாகவும் தேச நலனின் அக்கறை கொண்டு செய்ய வேண்டும் என்று பல திட்டங்கள் போடப்பட்டுள்ளன.

உதாரணமாக 13 லட்சத்து 69 ஆயிரம் கோடியில் 4 ஆண்டுகளில் நேஷனல் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் பைப் லைன் அறிவிக்கப்பட்டது. அது 30% கூட நிறைவேற்றப்படவில்லை.அது முடிவதற்குள் தேசிய ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது 2021 முதல் 51 வரை 30 ஆண்டு திட்டமாகும். இதற்கு 38அரை லட்சம் கோடி முதலீடு வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அது 2021 -222 முதல் அமுல்படுத்தப்பட வேண்டியது. ஆனால் இந்த இரண்டு திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள். அது எந்த அளவுக்கு முடிந்திருக்கிறது என்பதை பற்றி ரயில்வே பட்ஜெட்டிலோ அல்லது பொருளாதார ஆய்வு அறிக்கையிலோ நியாயமான நேர்மையான பரிசீலனையோ கிடையாது. இந்த திட்டங்கள் நிறைவேறினால் தான் வேகமான பாதுகாப்பான கட்டுப்படியான வண்டிகளை இயக்க முடியும்.

தினம் ஒரு வந்தே பாரத் வண்டியை பிரதம மந்திரியே நேரடியாக திறந்து வைக்கிறார். இந்த வண்டிகள் சராசரி வேகம் 85 கிலோ மீட்டருக்கு மேல் கிடையாது. இந்த வண்டிகளை இயக்கவும் பல உள்ளூர் வண்டிகள் ஓரங்கட்டப்படுகின்றன. விரைவு வண்டிகள் இயக்க வேண்டும் என்றால் லெவல் கிராசிங் கேட்டுகள் அகற்றப்பட்டு ரயில் மேம்பாலம் ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும். அதேபோல தண்டவாளத்தின் இருமருங்கிலும் சுவர் எழுப்பப்பட வேண்டும். அனைத்து இன்ஜின்களிலும் கவச் என்ற மோதல் தடுப்பு கருவி பொருத்தப்பட வேண்டும் .இது எதுவும் இல்லாமல் வந்தே பாரத்தையும் விரைவு வண்டிகளையும் விளம்பரத்துக்காக விடுவது பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.

இந்த திட்டங்களுக்கு எல்லாம் நிதி தனியாரிடமிருந்து வரும் என்று 30 ஆண்டுகளாக சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் தனியார் தண்டவாளம் போட்டு ரயில் ஓட்டிக்கொள்ள வர தயார் இல்லை. தேசிய பணமாக்கும் திட்டத்தில் ரயில் வண்டிகளையும் ரயில் நிலையங்களையும் தண்டவாளங்களையும் தனியாருக்கு குத்தகை விட திட்டம் போட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க கூறினார்கள். ஆனால் அதற்கும் யாரும் வர தயார் இல்லை. அடித்தள கட்டுமானம் சரியாக இல்லாத நேரத்தில் எந்த தனியாரும் முன் வர தயார் இல்லை. எனவே விரைவு வண்டிகளாகட்டும் அல்லது தனியார் வண்டிகள் ஆகட்டும் எதுவானாலும் அடித்தள கட்டுமானம் நிறைவு செய்யாமல் எதுவும் நடக்காது. இந்த அரசு அரசு முதலீடு செய்ய தயார் இல்லை.

எனவே சரக்கு போக்குவரத்து 45 சதவீதம் ரயிலில் செல்வதும் சாத்தியமில்லை. சரக்கு வண்டிகளின் வேகம் 50 கிலோமீட்டர் ஆக்குவதும் சாத்தியமில்லை. பயணி வண்டிகளின் வேகம் 130 கிலோ மீட்டர் ஆக்குவதும் சாத்தியமில்லை. விபத்தற்ற ரயிலும் சாத்தியமில்லை. எனவே நான் இந்த அரசை ரயில்வேயில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.விலை மதிக்க முடியாத மனித உயிர்களை மேலும் இழக்க தயாராக வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.