மணிப்பூரில் என்ன நடக்கிறது? பாஜக கையிலெடுத்த அஸ்திரம்… உடைத்து பேசிய சசிகாந்த் செந்தில்!

சென்னையில் உள்ள
காங்கிரஸ்
தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்தி செந்தில், மணிப்பூரில் நடப்பது ஏதோ இரு இனக் குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதலாக மட்டும் பார்க்க முடியாது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அங்கு மதவாத அரசியலை பாஜக முன்னெடுத்து வந்துள்ளது.

சசிகாந்த் செந்தில் கேள்வி

ஒட்டுமொத்த பழங்குடி மக்களையும் கிறிஸ்துவர்கள் என்று டார்கெட் செய்து இந்துத்துவாவை வளர்க்க அரசே துணை போயிருக்கிறது. இந்த விளைவு இன அழிப்பு என்ற நிலைக்கு தள்ளிவிட்டது. இது அரசின் துணையில்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. தற்போது ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு வந்துவிட்டனர். யார், யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லும் நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர்.

அழிந்து போன ரோஹிங்கியா முஸ்லீம்கள்

எனவே மணிப்பூர் நடப்பதால் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நினைத்துவிடக் கூடாது. அங்கு நடப்பது, நாளை இங்கேயும் நடக்கலாம். மியான்மரில் இப்படித்தான் ரோஹிங்கியா முஸ்லீம்கள் என்ற இனக்குழுவே இல்லாமல் போய்விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் கலவரத்தை உண்டு பண்ணும் அமைப்புகளை மணிப்பூரில் அரசே ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த 3ஆம் தேதி இனப் படுகொலையை ஆரம்பித்துள்ளனர்.

மதவாத பிரச்சினை

வரலாறு காணாத அளவிற்கு மக்கள் அடித்து கொல்லப்பட்டு வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட தேவாலயங்களையும் இடித்துள்ளனர். எனவே வெறும் இனக் குழு மோதலாக மட்டும் பார்க்க முடியாது. மதவாத பிரச்சினை என்று தான் பார்க்க வேண்டியுள்ளது. மணிப்பூரில் எத்தனை நிவாரண முகாம்கள் நடைபெற்று வருகின்றன? என்று பாஜக அரசு விளக்க வேண்டும். ஏனெனில் உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகள் இல்லாமல் மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர்.

காடுகளில் தஞ்சம்

நிறைமாத கர்ப்பிணிகள் காடுகளில் பிரசவம் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனக்கு கிடைத்த தகவலின்படி, 37 ஆயிரம் பேருக்கு மேல் எந்தவித வசதியும் இன்றி காடுகளில் வசித்து வருகின்றனர். இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடந்து வரும் போது, புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா, செங்கோல் போன்ற விஷயங்களை வைத்து நம்மை திசை திருப்ப பார்க்கிறது பாஜக அரசு.

சட்டம் ஒழுங்கு யார் கையில்

தற்போது நிவாரண முகாம்களில் வசிப்பவர்கள் மீண்டும் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். ஏனெனில் கிராமம், கிராமமாக வீடுகளை கொளுத்தி விட்டனர். இவர்களை பற்றிய விவரங்களை அரசு கைகளில் வைத்திருக்கிறதா? என்பதை விளக்க வேண்டும். மேலும் மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை யார் கையாள்கிறார்கள்? என்று பதில் சொல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் 15 நாட்களில் மணிப்பூர் பிரச்சினைக்கு தீர்வு காணப் போகிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புறப்பட்டு சென்றுள்ளார். இது நகைப்பிற்கு உரியதாக இருக்கிறது. எனவே எங்களின் அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளிப்பது மட்டுமின்றி, மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகாந்த் செந்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.