தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் சீரமைப்பு: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

சென்னை: தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் விரைவில் சீரமைக்கப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பழங்குடியினர் நலனைக் காக்க தமிழகத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் பகுதிகள் இல்லாத போதிலும் பழங்குடியினர்களின் நலன் மற்றும் அவர்களது முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்க தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் (Tamil Nadu Tribes Advisory Council) அரசாணை (நிலை) எண். 3042, உள்துறை, நாள் 04.09.1961-இல் ஏற்படுத்தப்பட்டது. இம்மன்றம் 1978, 1980, 1998, 2007, 2009 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மறு சீரமைக்கப்பட்டது.

பழங்குடியின மக்களின் முன்னேற்றமே சமூக நீதியாக அமையும் என்பதில் தமிழக முதல்வர் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதால், பழங்குடியின பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்கு அமைத்தல் மற்றும் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் பழங்குடியினரின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய அலுவல் சாரா உறுப்பினர்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இம்மன்றம் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு 2021-ஆம் ஆண்டு இவ்வரசால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் செயல்படுவதை போன்று சிறப்பாக செயல்படும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் முடங்கியுள்ள நிலையில், பழங்குடியினர் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். வாசிக்க > 2 ஆண்டுகளாக முடங்கிய தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம்: நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.