இங்கிருந்தே நிலா தெரியுதே, சந்திரயான் 3 ஏன்? பாக். மாஜி அமைச்சர் கேட்ட கேள்வி! சமஸ்தானமே ஆடிப்போச்சு

இஸ்லாமாபாத்: நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 விண்கலத்தை இந்தியா விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான், ‛‛இங்கே இருந்து பார்த்தாலே நிலா தெரிகிறது. அப்புறம் ஏன் அங்கு செல்ல வேண்டும்” என இம்ரான் கான் கட்சியின் முன்னாள் அறிவியல்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி டிவி விவாதத்தில் கேள்வியெழுப்பிய நிலையில் ‛ட்ரோல் மெட்டீரியலாக’ மாறியுள்ளார்.

நிலா குறித்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கால்பதித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நிலா குறித்த ஆய்வில் முத்திரை பதிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்காக சந்திரயான் திட்டம் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது.

சந்திரயான் முதல் திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியா கண்டுபிடித்தது. சந்திரயான் 2 மூலம் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா முயன்றது. ஆனால் எதிர்பாராத விதமாக நிலவின் தென்துருவத்தில் இறங்க முயன்ற லேண்டர் விழுந்து நொறுங்கியது.

இருப்பினும் இந்தியா முயற்சியை கைவிடவில்லை. சந்திரயான் திட்டம் 3-யை இஸ்ரோ ரூ.615 கோடியில் உருவாக்கியது. விண்கலம், லேண்டர், ரோவர் உள்பட 7 வகையான ஆய்வு கருவிகளுடன் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்3-எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது தொடர்ந்து விண்கலத்தின் சுற்று வட்ட பாதை உயர்த்தப்பட்டு வருகிறது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் வட்டபாதையில் சுற்ற லேண்டர் கருவி ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை 5.45 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும். லேண்டரில் இருந்து ரோவர் வாகனம் பிரிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. நிலவின் தென்துருவத்தில் ஆய்வு வாகனங்களை தரையிறக்குவது மிகவும் சவாலானது. மெதுவாக தான் நிலவின் தென்துருவத்தில் லேண்டர் வாகனத்தை தரையிறக்க முடியும். கடந்த முறை இந்த செயல்பாட்டில் தான் இந்தியா பின்னடைவை சந்தித்தது.

தற்போது கடந்த முறை கற்ற பாடத்தின் மூலம் லேண்டர் கருவி மேம்படுத்தப்பட்டு நிலவில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென்துருவத்தில் பெரிய பள்ளம், கரடுமுரடான நிலப்பரபு, -290 டிகிரி குளிர், இருள்சூழ்ந்த பகுதி உள்ளதால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே பின்வாங்கி வரும் நிலையில் இந்தியா துணிச்சலாக சந்திரயான் 3 திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில் தான் சந்திரயான் – 3 திட்டம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பாவத் சவுத்ரி டிவி விவாதத்தில் கலந்து கொண்டார். பாவத் சவுத்ரி என்பவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்தவர். இவர் இம்ரான்கான் அமைச்சரவையில் அறிவியல் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் தான் பாவத் சவுத்ரி சந்திரயான்-3 திட்டம் குறித்து கருத்து தெரிவித்து ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளார்.

அதாவது ‛‛இங்கிருந்து மேலே பார்த்தாலே நிலா நன்றாக தெரிகிறது. அப்புறம் ஏன் அங்கு செல்ல வேண்டும்” என சந்திரயான் – 3 திட்டம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். இதுதொடர்பான வீடியே தான் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பலர் பாவத் சவுத்ரியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்தியாவை ஒப்பிடும்போது பாகிஸ்தான் விண்வெளி துறையில் அதிக ஆர்வம் காட்டுவது இல்லை. இத்தகைய சூழலில் தான் பாவத் சவுத்ரி இப்படி தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் சந்திரயான்- 3 திட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.