வாஷிங்டன்: பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், குழந்தைகள், பெண்களை கொடூரமாக கொலை செய்வதாக, ஹமாஸ் குழு தலைவர்களுள் ஒருவரின் மகனான மொசாப் ஹசன் யூசப் பேட்டியளித்துள்ளார்.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் குழு தலைவர்களுள் ஒருவரின் மகனான மொசாப் ஹசன் யூசப், ‘பாக்ஸ் நியூஸ்’ செய்தி சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
இவர் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். மொசாப் ஹசன் அமெரிக்காவில் அடைக்கலம் கேட்டு வருகிறார். பேட்டியில் அவர் கூறியதாவது: நான் ஹமாஸ் தலைவரின் மகன் (அப்பா பெயரை குறிப்பிடவில்லை). ஆனால், உண்மையில் ஹமாஸ் தலைவர்களுக்கு பாலஸ்தீன மக்களை பற்றிய எந்த கவலையும் இல்லை.
மனித உயிர்களை அவர்கள் மதிப்பதில்லை. அவர்களுடைய கொடூரங்களை நான் நேரில் பார்த்துள்ளேன். 1996ல் நான் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தபோது ஏராளமான பாலஸ்தீனர்களை ஹமாஸ் அமைப்பினர் ஈவு இரக்கமின்றி கொலை செய்தனர். அப்போது தான் ஹமாஸ் இயக்கத்தினருடன் இருக்க முடியாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். காசா பகுதியை ஹமாஸ் இயக்கத்தினர் ஆட்சி செய்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என யோசித்தேன்.
இளவரசரை போல இருந்தேன்
இஸ்ரேலை அவர்கள் வென்றுவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் யோசித்தேன். அவர்கள் எங்கள் மக்களையும் (பாலஸ்தீனர்களையும்) கொன்றுவிடுவார்கள். உண்மையில் நான் ஹமாஸ்களிடம் ஒரு இளவரசரை போல தான் இருந்தேன். ஆனால் எனக்கு அவர்களை பிடிக்கவில்லை. அதன்பிறகு 25 ஆண்டுகள் ஓடிவிட்டன. காசா அவர்கள் ஆட்சியில் இருக்கிறது. இப்போது நடக்கும் சண்டைகள் மூலம் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை காட்டிவிட்டனர்.
அவர்களிடம் இப்போது 200 பிணைக்கைதிகள் உள்ளனர். குழந்தைகளை கூட அவர்கள் கொன்றிருக்கிறார்கள். இதுதான் அவர்களின் கொடூர முகம். முடிந்த அளவு பொதுமக்களை காசாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதுவொரு கோரமான போர். இஸ்ரேல் இந்த போரை ஆரம்பிக்கவில்லை; ஹமாஸ் தான் துவக்கியது. குழந்தைகளையும், பெண்களையும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் எகிப்து நாட்டிற்கு அனுப்ப வேண்டும். தேவைப்பட்டால் காசாவை வடக்கு, தெற்கு என்று பிரிக்க வேண்டும்.
வேறு வழியில்லை
வடக்கு காசாவில் தான் பெரும்பாலான சுரங்க வழிகளும், பதுங்கு குழிகளும் இருக்கின்றன. அதன்பிறகு ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றுகையிட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் இல்லாமல் செய்ய வேண்டும். ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள சுரங்க பாதைகள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டவை. அதற்குள் விஷவாயுவை செலுத்த வேண்டும்; வேறு வழியில்லை. அதற்கு இதுதான் சரியான நேரம். அதற்கு முன்பு அப்பாவி பொதுமக்களை முழுமையாக வெளியேற்ற வேண்டும்.
ஹமாஸ்கள் ஒழிக்கப்பட்ட பிறகுதான் காசாவிற்கு நிதியுதவி செய்ய வேண்டும்; இந்த உதவி ஹமாஸ்களுக்கு கிடைத்துவிடக் கூடாது. சுரங்க பாதைகளை அழித்த பிறகு, காசாவில் ஹமாஸ்களின் அதிகாரத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை தர வேண்டும். அதன்பிறகு, பாலஸ்தீனர்களின் கையில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும். அரேபிய நாடுகளுக்கு எகிப்து தலைமை ஏற்க வேண்டும். இப்போதைக்கு காசாவிற்கு எந்த உதவி செய்தாலும் அது தவறாக முடியும்.
தேசியவாதிகள் அல்ல
ஹமாஸ்கள் தேசியவாதிகள் அல்ல; அது ஒரு மதவாத அமைப்பு. தேசியத்தை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. உண்மையை சொல்லப்போனால், அவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள். தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி கொள்வதற்காக அவர்கள் பாலஸ்தீனத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள்.
இப்போது தான் நாம் ஈரான் பற்றியும், ரஷ்யா பற்றியும் பேசுகிறோம். ஹமாஸ்க்கு ஈரான், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறது. இந்த பிரச்னைக்கு முக்கியமான காரணம் ஈரான். ஈரானுக்காக ஹமாஸ் வேலை செய்கிறது. பாலஸ்தீனர்களை கவசமாக ஹமாஸ் பயன்படுத்துகிறது. ஹமாஸ்களிடம் இருந்து பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். அதன்பிறகு இயல்பான வாழ்க்கையை வாழவே பாலஸ்தீனர்கள் விரும்புவார்கள். தாங்கள் வசிக்கும் இடங்களில் ஏவுகணைகள் இருப்பதையும், மருத்துவமனைகளில் இருந்தெல்லாம் ஏவுகணைகள் வீசப்படுவதையும் பாலஸ்தீனர்கள் விரும்பவில்லை.
உலக மக்களை என்னால் சமாதானப்படுத்த முடியாது. இப்போதைக்கு பாலஸ்தீன மக்கள் உணர்வுபூர்வமாக இருக்கிறார்கள். குழந்தைகள் இறப்பதை பார்த்து அவர்கள் பரிதவிக்கிறார்கள். மருத்துவமனைகளில் இருப்பவர்களை ஹமாஸ்கள் கொல்கிறார்கள், அதற்கு ஆதாரம் இருக்கிறது.
ஆனால் ஹமாஸ்கள் இஸ்ரேலை குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் பொதுமக்களின் கருத்துகளை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். இப்போது அதனை செய்யக்கூடாது. உலகின் மிகக்கொடிய பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போரில் வெற்றி பெறுவதற்கே முன்னுரிமை தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்