புதுடெல்லி: டெல்லியில் வெடித்த காரை ஓட்டிச் சென்றது மருத்துவர் உமர் நபி-தான் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணிக்கு ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்தவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விசாரணையில், வெடிபொருளுடன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்தது தெரியவந்தது. சம்பவ நாளில் டெல்லி முழுவதும் பல்வேறு சிசிடிவி பதிவுகளில் அவரது முகம் பதிவாகியிருந்தது.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் இவர் பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள மருத்துவர்கள் சிலருடன் சேர்ந்து நாடு முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த மிகப்பெரிய சதித் திட்டங்களை தீட்டியது ஒவ்வொன்றாக தெரியவந்தது. ஜெய்ஷ் இ முகமது, அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய அமைப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் அடுத்த சில மணி நேரத்தில் தெரியவந்தது. இதையடுத்து 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
உமர் நபியின் தாயாரிடம் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த மாதிரிகளின் மூலக்கூறுகளும் வெடித்து சிதறிய காரில் இருந்த உமரின் உடல்பாக மூலக்கூறுகளும் ஒத்துப்போவது பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. எனவே காரை ஓட்டி வந்தது உமர் நபிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஒயிட் காலர் தீவிரவாதத்தின் முக்கிய சதிகாரராக உமர் நபி இருந்துள்ளார். குண்டு வெடிப்பை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் குண்டு வெடிப்புக்கு சில மணி நேரத்துக்கு முன் உமர் நபி, ராம்லீலா மைதானத்துக்கு அருகில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் இருப்பதை காணமுடிகிறது. இதன் மூலம் குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கு முன் அவர் மசூதிக்கு சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
வெடித்து சிதறிய ஹுன்டார் ஐ20 காருடன் மேலும் 2 கார்களை குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்காக தீவிரவாதிகள் வாங்கியது தெரியவந்தது. இதில் சிவப்பு நிற ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட் கார், ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள கண்டவலி கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் இந்த காரை ஆய்வு செய்தனர். காரை சுற்றிலும் 200 மீட்டர் பகுதிகளை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர், இந்நிலையில் 3-வது காரை (மாருதி சூசுகி ப்ரெஸ்ஸா) பறிமுதல் செய்துள்ளனர்.