உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் பல் தூரிகைகளை (டூத் பிரஷ்) கழிவறையில் அல்லது அதனருகில் உள்ள சுவரில் வைப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் இது உங்களுக்கான கட்டுரை தான்.

வீடுகளில் நாம் பயன்படுத்திவிட்டு வைக்கும் டூத் பிரஷ்களை கழிவறைகளிலோ அல்லது அதன் பக்கவாட்டு சுவர்களில் வைப்பதோ சுகாதாரமற்றது என்கிறது அறிவியல் முடிவுகள்.
மேற்கத்திய கழிப்பறை பயன்பாட்டுக்குப் பிறகு மூடியை மூடாது, கழிவுகளை அகற்ற அதிக அழுத்தத்தில் வெளிவரும் நீரால், கழிப்பறை உள்ளிருந்து கண்களுக்கே தெரியாத மேகம் போல் எழும் நுண்ணிய கிருமிகள் மற்றும் மனித மலத்திலிருந்து வெளியேறும் கிருமிகள் இணைந்து நச்சுத்தன்மை கொண்ட பாக்டீரியாக்களை பரப்புகின்றன.
இந்த கண்களுக்கு புலப்படாத பாக்டீரியாக்கள், அந்த கழிப்பறையில் உள்ள மற்ற பொருட்களின் மீது நீண்ட நேரம் தாக்கத்தை செலுத்துகின்றன. இந்த பாக்டீரியாக்கள் கழிப்பறை வெளியேயும் காற்றில் பரவி மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களிலும் படிகின்றன.
குறிப்பாக கழிப்பறையில் வைக்கப்படும் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை, டூத் பிரஷ்களில் நீண்ட நேரம் ஆதிக்கம் செலுத்துகின்றன.

க்ளோஸ்ட்ரிடியம் (Clostridium), எசரிக்கியா கோலை (Escherichia coli) எனப்படும் பாக்டீரியாக்கள், மேற்கத்திய கழிப்பறை பயன்பாட்டின்போது மூடியை மூடாமல் அதிக அழுத்தத்தில் தண்ணீர் வெளியேற்றப்படும் போது வெளியேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த பாக்டீரியாக்கள் டூத் பிரஷ்களில் அதிகளவில் படியும்போது, அதிலுள்ள முட்கள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதை கண்டுணராமல் அப்படியே பயன்படுத்துவதால் காலப்போக்கில் பல் சுத்தத்திற்கு மட்டுமின்றி இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தையே தாக்குகிறது. ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களிடம் இன்னும் சில விளைவுகளை இது உண்டாக்கும்.
இது கிட்டத்தட்ட இந்திய கழிப்பறைகளுக்கும் பொருந்தும். இந்திய கழிப்பறை மூடி இல்லாமல் இருப்பதால், இதில் மலம் கழித்த பிறகு அதற்கென உள்ள சுகாதார வேதி திரவத்தால் சுத்தம் செய்து பராமரிப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

பாக்டீரியாக்களிடமிருந்து பல் தூரிகைகளை ( டூத் பிரஷ்) எவ்வாறு காப்பது? இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பல் மருத்துவர் ஹேமா மாலதி கூறியதாவது…
’’இந்தியாவில் பெரும்பாலும் கழிப்பறையும், குளியலறையும் ஒன்றாக இருப்பதால் சுவரின் பக்கவாட்டில் குடும்ப உறுப்பினர்கள் டூத் பிரஷ்களை ஒன்றோடொன்று தொடும் படி வைத்துவிடுகிறார்கள்.
இதன் காரணமாகவும், காற்றோட்டம் இல்லாததால் ஏற்படும் நீடிக்கும் ஈரப்பதம், கழிவறைகளில் பரவும் பாக்டீரியாக்கள் பல் தூரிகைகளில் படர்ந்து பாக்டீரியாக்கள் பெருக்கத்திற்கு காரணமாகிறது. டூத் பிரஷ்களின் ஆயுட்காலம் 3 மாதங்கள் மட்டுமே. எப்போது டூத் பிரஷ்களின் முட்கள் விரிவடைகிறதோ, அப்போதே அது பயனற்று போகிறது.
டூத் பிரஷ்களை காற்றோட்டமான நிலையில், நிமிர்ந்த நேரான நிலையில் பிற பொருட்களோடு மோதாத வகையில் வைக்க வேண்டும். புற ஊதா கதிர்கள் மூலம் டூத் பிரஷ்களை சுத்தம் (UV sanitisation ) செய்தல் சாத்தியமற்றது. பல் துலக்குவதற்கு முன்பு குழாயிலிருந்து வரும் அதிக விசையுடன் கூடிய நீரில் கழுவிவிட்டு அதன் பிறகே பற்பசையை தடவ வேண்டும்’’ என்கிறார் பல் மருத்துவர் ஹேமா மாலதி.
கழிப்பறை மற்றும் குளியலறையில் டூத் பிரஷ்களை வைக்காமல் உலர்ந்த காற்றோட்டமான பகுதிகளில் வைப்பதுதான் பாதுகாப்பான ஒன்று. மேற்கத்திய கழிப்பறையில் கழிவுகளை அகற்ற அதீத அழுத்த நீர் வெளியேற்றத்திற்கு முன்பு கழிப்பறை மூடியை மூடினால் அதிலிருந்து வெளிவரும் கிருமிகளை ஓரளவு கட்டுபடுத்த முடியும். பல வீடுகளுக்குள் கழிப்பறைகள் அளவு சிறிய அளவில் இருப்பதால் டூத் பிரஷ்களை வேறு காற்றோட்டமான அறைகளில் வைப்பதே சுகாதாரம்.