"என்.டி.ஏ ஆட்சி அமைக்கும், தி.மு.க நிச்சயம் தோல்வியைத் தழுவும்" – நாகர்கோவிலில் பிரதமர் மோடி

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சி சார்பில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற்கொண்டார்.  ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்த பிரதமர் மோடி, ஹெலி பேட் தளத்தில் இருந்து காரில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு சென்றார். வேப்பமூடு சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய மோடி பின்னர் ரோடு ஷோவைத் தொடங்கினார். சாலையின் இருபுறமும் பிரதமர் மோடியை பார்க்க காத்திருந்த மக்கள் ரோஜா மலர்களைத் தூவி வரவேற்றனர். வாகனத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மோடியுடன் நின்றவாறே மக்களைப் பார்த்து கையசைத்து வாக்கு சேகரித்தனர். வேப்பமூடு சந்திப்பில் தொடங்கிய ரோட் ஷோ-வின்போது வழியில் அம்பேத்கர் உருவபடத்துக்கும், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி ரோடு ஷோ

அண்ணாசிலை அருகே நின்றிருந்த அ.தி.மு.க நிர்வாகிகளை சந்தித்த பிரதமர் மோடி எம்.ஜி.ஆர் சிலை அருகே நின்றுகொண்டிருந்த, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களின் கைகளை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். எம்.ஆர்.காந்தியின் தோளில் தட்டி அன்பை வெளிப்படுத்தினார் மோடி. விளவங்கோடு வேட்பாளர் விஜயதரணி, பத்மநாபபுரம் குமரி ப.ரமேஷ், குளச்சல் சிவகுமார், கன்னியாகுமரி தளவாய் சுந்தரம், கிள்ளியூர் நிவின் சைமன், வாசுதேவ நல்லூர் வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி, ராதாபுரம் பாலகிருஷ்ணன், திருச்செந்தூர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

பின்னர் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் நின்றுகொண்டு `பாரத் மாதா கீ ஜே’ என கோஷமிட்ட பிரதமர் மோடி பேசுகையில், “​தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) நிச்சயம் வெற்றி பெறும். ​தி.மு.க நிச்சயமாக தோல்வியைத் தழுவும். ​சிறந்த தமிழ்நாட்டிற்காக எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் அறிவார்கள்” என பேசினார்.

வேட்பாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி
பிரதமர் மோடி ரோடு ஷோ

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் நாகர்கோவில் ரோடு ஷோ நிகழ்ச்சியின் வீடியோவைப் பகிர்ந்த பிரதமர் மோடி,  ‘நாகர்கோவிலின் சாலைப் பேரணியில் ஈடு இணையற்ற உற்சாகம் நிறைந்திருந்தது. தி.மு.க-வின் தவறான ஆட்சியையும், ஊழலையும் தமிழகம் இனிமேலும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்திற்கு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கும். அதற்காக காட்சிதான் இது’ என குறிப்பிட்டிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.