நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' – தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக, சட்டமன்றத் தேர்தல் நடந்து வரும்போதிலும், நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் போட மறுத்து பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் இராதாபுரம் மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் சில சர்ச்சைகள் உள்ளன. குறிப்பாக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் சாதி ரீதியான சர்ச்சைகள் நீண்ட காலமாகவே உள்ளன. பள்ளி மாணவன் சின்னத்துரை மீது நடந்த கொலை வெறித் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த தாக்குதல்கள் தொடர்பாக அப்பகுதியில் பெரும் சர்ச்சை நிலவுகிறது. அதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் இந்தப் பொதுத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த மார்ச்2-ம் தேதி பெரும்பத்து கிராமத்தில், போதையில் இருந்த ஒரு கும்பல், கண்ணில் கண்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டியது.

நாங்குநேரி காவல்நிலையம்

அந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர், பலர் படுகாயம் அடைந்து இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள பட்டியல் மற்றும் நாடார் சமூக மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பெரும்பத்து பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் இதுவரை கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதனால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். அந்த கிராமத்துக்குள் எந்த வேட்பாளர் சென்றாலும் உள்ளே அனுமதிக்கவில்லை. அத்துடன், கிராமத்தின் உள்ளே நுழையும் பகுதியில் பொதுமக்கள் சார்பாக ஃபிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். அதில், தாங்கள் தேர்தலைப் புறக்கணிப்பதால் யாரும் கிராமத்தின் உள்ளே வர வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பதாகை வைத்திருந்தனர். அதனால் அரசியல் கட்சியினர் அந்தக் கிராமத்திற்குள் செல்லவே தயக்கம் காட்டினார்கள். வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுமாறு வலியுறுத்தினார்கள். ஆனாலும் பொதுமக்கள் அதனை ஏற்கவில்லை. முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்காக வழங்கப்பட்ட தபால் வாக்கையும் அந்தப் பகுதி மக்கள் செலுத்தவில்லை

பெரும்பத்து கிராமத்தினருடன் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இருப்பினும் காலை முதல் மீண்டும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதிலும் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், பெரும்பத்து கிராம் மக்கள் வாக்களிக்க முன்வரவில்லை. இதனிடையே, பெரும்பத்து கிராமத்தைச் சேர்ந்த சில குடும்பத்தினர் வெளியூர்களில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாக்கைச் செலுத்த முன்வந்தனர். ஆனால் உள்ளூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அவர்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

ராதாபுரம்

ஆனாலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை மீறி, ஒரு பெண் தனது வாக்கைச் செலுத்தி விட்டார். மேலும் சிலரும் வாக்குகளைச் செலுத்த முன் வந்தனர். ஆனால் உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தனர். அதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் வாக்களிக்க வந்தவர்களை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட வடக்கு இளைய நயினார்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு அறிவித்தனர். அவர்களை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றும் நிறைவேறவில்லை. அதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நெல்லை மாவட்டத்தில், வாக்கு செலுத்த பொதுமக்கள் முன்வராத சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.