பென்னாகரத்தில் சட்ட விரோத மதுக்கடை; அடித்து நொறுக்கிய பெண்கள்; ஓட்டம் பிடித்த உரிமையாளர்

தங்கள் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மது விற்பனைக்கடைகளை கிராமப் பெண்கள் ஒன்றுகூடி அடித்து உடைத்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது வியாபாரி தப்பித்து ஓட்டம்
மது வியாபாரி தப்பித்து ஓட்டம்

தமிழகத்தில் அரசு அனுமதியோடு அமைந்துள்ள மதுக்கடைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு, கடைகளை மூடச்சொல்லி பொதுமக்கள் போராடி வருவது ஒருபக்கமென்றால், இன்னொரு பக்கம், மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத கடைகள் தமிழக கிராமங்களில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்தான் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் இதுபோன்ற சட்டவிரோத மது விற்பனைக் கடைகள் 4 இயங்கி வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட இக்கிராம பெண்கள் நேற்று ஒன்றுகூடி மதுக்கடைகளை அடித்து நொறுக்கினர்.

உடைக்கப்பட்ட சட்டவிரோத மதுக்கடை
உடைக்கப்பட்ட சட்டவிரோத மதுக்கடை

மதுக்கடை நடத்தி வந்த கோவிந்தன் என்பவர் பெண்களிடம் மிரட்டல் விடுத்து வாக்குவாதம் செய்ய ஆத்திரமடைந்த பெண்கள் அவரை ஓட ஓட துரத்தி அடித்தனர். இந்தச் சம்பவம் பென்னாகரம் பகுதியில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, “எங்கள் பகுதியில் பெரியவர் முதல் சிறுவர் வரை போதைப்பழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள். அதிலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை செய்வதால் பல குடும்பங்கள் நாசமாகி வருகின்றன.

இந்த வழியாக பள்ளி, கல்லூரி, வேலைக்கு பெண்கள் செல்ல முடியவில்லை, அச்சமாக உள்ளது. அதனால் இந்தக் கடைகளை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உட்பட எல்லா அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமீபத்தில் தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்தவர்களிடம் முறையிட்டும், அவர்களும் உதவவில்லை, அதோடுதான் நாங்களே கடைகளை அப்புறப்படுத்த கிளம்பி விட்டோம்” என்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.