தமிழ் சினிமாவின் தந்தை `நடராஜ முதலியார்' – வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்குநர்!

தமிழ் சினிமா வரலாற்றின் தொடக்கம் இயக்குநர் நடராஜ முதலியார். இன்று பெரிய ஆலமரமாகக் கிளைகளோடு படர்ந்து விரிந்திருக்கும் தமிழ் சினிமாவுக்கு முதல் விதை போட்டவர் நடராஜ முதலியார்தான்.

தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமான ‘கீசக வதம்’ படத்தை இயக்கிய நடராஜ முதலியார் மறைந்து இன்றோடு 55 ஆண்டுகள் ஆகின்றன.

நடராஜ முதலியார்

இந்தத் திரைப்படத்தில் தொடங்கி, புராணக் கதைகளை வைத்துப் பல்வேறு சினிமாக்களையும் இவர் உருவாக்கியிருக்கிறார்.

நடராஜ முதலியார் பற்றியும், அவர் இயக்கிய சினிமாக்கள் பற்றியும் நேரடி கள ஆய்வுகளைச் செய்து, ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநரும் ஊடகவியலாளருமான என். முருகராஜன்.

நடராஜ முதலியாரின் 55-வது நினைவு நாளில், அவரைப் பற்றியும் முருகராஜனின் ஆய்வுகள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.

2001-ல் கல்லூரி படிப்பை முடித்த முருகராஜன், திரைத்துறையில் உதவி இயக்குநராகவும், ஊடகத்துறையில் செய்தியாளராகவும் பணியாற்றியவர்.

2008-ல் மலையாள சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும் ஜே.சி. டேனியல் பற்றிய ஆய்வுக் கட்டுரையை வாசித்திருக்கிறார். அதுவே தமிழ் சினிமா வரலாற்றைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள இவருக்கு ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

நூற்றாண்டு காலத் தமிழ் சினிமாவின் தொடக்கம் குறித்த தெளிவான ஆவணங்கள் இல்லை என்பதை உணர்ந்தவர், தமிழின் முதல் மௌனப் படமான ‘கீசக வதம்’ குறித்த உண்மைகளைத் தேடிப் பயணத்தைத் தொடங்கினார்.

இயக்குநர் முருகராஜன்
இயக்குநர் முருகராஜன்

நீண்ட காலமாகவே ‘கீசக வதம்’ வெளியான ஆண்டு 1916-ஆ அல்லது 1918-ஆ என்பதில் குழப்பம் நிலவி வந்தது. 1970-ல் ‘சித்ரலயா’ இதழுக்கு நடராஜ முதலியார் அளித்த பேட்டியின் அடிப்படையில் 1916 என ஒரு சாராரும், 1964-ல் ‘தி இந்து’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியின் அடிப்படையில் 1918 என மற்றொரு சாராரும் கூறி வந்தனர்.

இந்த உண்மையை அறிய முருகராஜன் நடராஜ முதலியாரின் சொந்த ஊரான வேலூர் சென்றார். அங்குத் தகவல்கள் கிடைக்காத நிலையில், சென்னை அயனாவரம் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் பல ஆண்டுகள் தேடி அலைந்து, இறுதியில் நடராஜ முதலியாரின் பேத்தி குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அவர்களிடமிருந்து இதுவரை பொதுவெளியில் பகிரப்படாத மிக முக்கியமான ஆவணங்களை அவர் திரட்டியிருக்கிறார்.

முருகராஜன் சேகரித்த ஆவணங்களின்படி, நடராஜ முதலியார் 1917-ல் “இந்தியன் பிலிம் கம்பெனி” என்ற தென்னிந்தியாவின் முதல் திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் என்பது உறுதியானது.

இதன் மூலம் 1916-ல் படம் வெளியாக வாய்ப்பில்லை என்பதும், 1918-ல் தான் ‘கீசக வதம்’ வெளியானது என்பதும் தெரியவந்திருக்கிறது. இப்படத்தின் படச்சுருள்கள் பெங்களூரில் எடிட் செய்யப்பட்டன.

மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தி இந்தி வசனங்களையும், டாக்டர் குருசாமி முதலியார் ஆங்கில வசனங்களையும் எழுதினர். மௌனப் படங்களில் எழுத்து வசனங்களாகத் திரையில் வரும்.

நடராஜ முதலியார் - கீசக வதம் திரைப்படம்
நடராஜ முதலியார் – கீசக வதம் திரைப்படம்

மௌனப் படமான இது இலங்கை, பர்மா, மலேசியா என உலகெங்கும் திரையிடப்பட்டுப் பெரும் வெற்றி பெற்றது.

1971-ல் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் ‘தென்னிந்தியத் திரைப்படத் துறையின் தூண்’ எனப் போற்றப்பட்டுக் கௌரவிக்கப்பட்டதே அவருக்குக் கிடைத்த ஒரே பெரிய அங்கீகாரம்.

1923-ல் ஏற்பட்ட தீ விபத்தில், மில்லர்ஸ் ரோட்டில் இருந்த அவரது ஸ்டுடியோவும், முதல் படத்தின் படச்சுருளும் அழிந்து போயிருக்கின்றன.

2017-ல் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் ஒத்துழைப்புடன் தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகம் வரை சென்று தேடியும் தென்னிந்தியப் படங்கள் குறித்த தகவல்கள் முருகராஜனுக்குக் கிடைக்கவில்லை.

“கலை என்பது காலத்தின் கண்ணாடி” என்று குறிப்பிடும் முருகராஜன், தமிழ் சினிமாவிற்கென ஒரு முறையான ஆவணக் காப்பகம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

கீசக வதம் திரைப்படம்
கீசக வதம் திரைப்படம்

பிலிம் நியூஸ் ஆனந்தன் போன்றவர்கள் சேகரித்த ஆவணங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக உள்ளது.

தான் சேகரித்த ஆராய்ச்சிகளைக் கொண்டு, நடராஜ முதலியார் குறித்த ஓர் ஆவணப்படத்தை முருகராஜன் தயாரித்துள்ளார். பல்வேறு ஆளுமைகளையும் இதற்காக அவர் பேட்டி கண்டிருக்கிறார். முருகராஜனின் இந்த முயற்சி தமிழ் சினிமா வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.