Doctor Vikatan: என் வயது 49. எனக்கு ஆறு மாதங்களுக்கு முன் இடது குதிகாலில் வலி வந்தது. அதற்கு நிறைய ஆங்கில மருந்துகள் எடுத்துக்கொண்டேன். ஆனால், சரியாகவில்லை.
இப்போது இன்னொரு குதிகாலிலும் வலி ஆரம்பித்திருக்கிறது. ஆங்கில மருந்துகள் தவிர்த்து சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வு ஏதேனும் இருக்கிறதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

சித்த மருத்துவத்தில் குதிகால் வலி பிரச்னைக்கு நிறைய தீர்வுகள் உள்ளன.
‘வாதம் இருந்தால் வலி மிகும்’ என்கிறது சித்த மருத்துவம். எனவே, வாதத்தைக் குறைக்க முதலில் பேதி மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். உடலின் கழிவுகள் நீங்கினால்தான் உடலியக்கம் சீராகும். வாதம் சரியாகும், வலியும் படிப்படியாகக் குறையும்.
மலச்சிக்கல் இருந்தாலும் குதிகால் வலி அதிகமாகும். மருத்துவ ஆலோசனையுடன் நிலவாகை, கடுக்காய் போன்ற மருந்துகளை மலச்சிக்கலுக்கு எடுத்துக்கொள்ளலாம். வயிறு மந்தமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
புளிப்பு, காரம் அதிகமான உணவுகளைத் தவிர்த்து, எளிமையாகச் செரிக்கக்கூடிய உணவுகளை, துவர்ப்புச் சுவையுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
நாட்டு மருந்துக் கடைகளில் கோரைக்கிழங்கு கிடைக்கும். அதை அரைத்து, சலித்த பொடியை 5 கிராம் அளவு எடுத்து, பாலில் கலந்து குடிக்கலாம். அமுக்கரா சூரணத்தை 5 கிராம் அளவுக்கு காலை, இரவு உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம்.
ஒன்று அல்லது இரண்டு வெற்றிலை, பத்து நொச்சியிலைகள், சிறிய துண்டு சுக்கு, ஒரு டீஸ்பூன் ஓமம் எல்லாவற்றையும் தண்ணீரில் கொதிக்கவைத்து, கஷாயமாக காலையும் இரவும் எடுத்துக்கொள்ளலாம்.
முருங்கையிலை (காம்புடன்), கறிவேப்பிலை (காம்புடன்), பிரண்டை மற்றும் முடக்கற்றான் இலை ஆகிய அனைத்தையும் கொதிக்க வைத்த கஷாயம், குதிகால் வலிக்கு அற்புதமான பலனைத் தரும்.

வெந்நீரில் கல் உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் கால்களை வைத்து எடுக்கவும். கால்களைத் துடைத்துவிட்டு, கடுகெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் எல்லாம் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கிய எண்ணெயைத் தேய்த்து மிதமாக மசாஜ் செய்யவும். பிறகு கல் உப்பு அல்லது ஓமம் வறுத்து ஒத்தடம் கொடுக்கவும்.
தேங்காய் எண்ணெய்யைச் சூடாக்கி, கற்பூரம் சேர்த்துக் கரைத்த எண்ணெய்யையும் குதிகால்களில் தடவலாம். செங்கல்லைச் சூடாக்கிவிட்டு, அதன் மேல் எருக்க இலையை வைக்கவும். வலி நீக்கும் ஏதோ ஓர் எண்ணெய்யை கால்களில் தடவிக்கொண்டு, பொறுக்கும் சூட்டில் எருக்க இலைகளின் மேல் குதிகால்களை வைத்து எடுக்கவும். இது உடனடி நிவாரணம் தரும்.
தேவதாரு மரமஞ்சள் எனக் கிடைக்கும். அதைப் பொடித்து முட்டையின் வெள்ளைக்கருவுடன் அல்லது அரைத்த உளுத்த மாவுடன் சேர்த்து பசை போலச் செய்து குதிகால்களில் பற்றுப் போடலாம். இந்தச் சிகிச்சைகளை முறையான சித்த மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுப் பின்பற்றவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.