நடிகர் பிரபுவுக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்..!

நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த சொத்துகள் விற்பனை தொடர்பாக மனுக்களை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துகளில் தங்களுக்கு பங்கு தராமல் சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஏமாற்றிவிட்டதால், தங்களுக்கு சொத்துகளை பிரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில், இவர்கள் தரப்பில் சில கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் சொத்துகளை விற்கும் நடவடிக்கையில் ராம்குமாரும், பிரபும் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரதான வழக்குகளின் விசாரணை முடியும் வரை சாந்தி தியேட்டர் சொத்துகள் மற்றும் பங்குகளின் விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது, சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து சொத்துகளில் சாந்தி, ராஜவிக்கு சம பங்கு உள்ளது. சாந்தி தியேட்டர் பங்கு விற்பனையை பொறுத்தவரை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகின்றது. எனவே, இந்த விவகாரத்தில் பிரதான வழக்கை விசாரித்து முடிக்கும் வரை சாந்தி தியேட்டர் சொத்துகள் விற்பனைக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று வாதாடினார்.

இதேபோன்று, ராம்குமார் மற்றும் பிரபு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், சாந்தி தியேட்டர் பங்குள் முழுவதும் 2010-ம் ஆண்டே கைமாறி விட்டதாக வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கின் கூடுதல் மனுக்கள் மீது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு அளித்தார். அதில், சாந்தி தியேட்டர் சொத்துகள் மற்றும் பங்கு விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிய சாந்தி மற்றும் ராஜ்வி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.