
இந்தோனேசியாவில் திரவ வடிவிலான இருமல் மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியானது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரச்னைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தோனேசியாவில் திரவ வடிவிலான மருந்துகளை சாப்பிட்ட சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிற நச்சு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டில் 99 இளம் குழந்தைகள் இறந்துள்ளன.
இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டவையா அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து தகவல் இல்லை. தற்போதைக்கு அங்கு இருமல் மருந்து தடை செய்யப்பட்டுள்ளது.
newstm.in