மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வரானார் சுவந்து அதிகாரி; பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்பு

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் தேர்தல் கமிஷனும், பா.ஜ.கவும் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டனர் என்று கூறி மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வந்தார்.

இதையடுத்து மேற்குவங்க சட்டமன்றத்தை ஆளுநர் ஆர்.என். ரவி கலைத்து உத்தரவிட்டார். நேற்று கொல்கத்தாவில் நடந்த பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் புதிய சட்டமன்றத் தலைவராக சுவந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய தலைவர் பதவிக்கு 8 பரிந்துரைகள் வந்திருந்ததாகவும், எட்டுமே சுவந்து அதிகாரியைத்தான் பரிந்துரைத்து இருந்தது என்று பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

நேற்றே சுவந்து அதிகாரி ஆளுநரைச் சந்தித்து தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு முன்பாகப் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வந்தன.

பதவியேற்பு விழா
பதவியேற்பு விழா

கொல்கத்தாவின் மத்தியப் பகுதியில் உள்ள பிரிகேட் அணிவகுப்பு மரியாதை மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் வந்திருந்தனர்.

விழாவில் சுவந்து அதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுவந்து அதிகாரியுடன் திலீப் கோஷ், அக்னிமித்ர பால், நிசித் பிரமானிக், க்ஷுத்திரம் துடு மற்றும் அசோக் கீர்தானியா ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

பதவியேற்பு விழாவிற்கு சுவந்து அதிகாரி வந்தபோது மிகவும் எளிமையாக காவி குர்தா அணிந்து வந்திருந்தார். முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி எப்போதும் வெள்ளை சேலையும், சிலீப்பர் எனப்படும் செருப்பும் அணிந்து எளிமையாகக் காணப்படுவார். அவரிடம் வளர்ந்த சுவந்து அதிகாரியும் தன்னை மிகவும் எளிமையானவன் என்று காட்டிக்கொண்டார்.

முன்னாள் மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஆடை வடிவமைப்பாளரான அக்னிமித்ரா பால், காயஸ்தர் சமூகத்தைச் சேர்ந்தவர். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாஜகவின் ஒரே பெண் முகமாகவும் உள்ளார். அக்னிமித்ரா கடந்த 2019ம் ஆண்டுதான் பா.ஜ.கவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஜன சங்கத்தின் நிறுவனரான சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்த மண்ணான மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பது பா.ஜ.கவின் கனவாக இருந்தது. இப்போது அந்தக் கனவு நிறைவேறி முதல் பா.ஜ.க அரசு பதவியேற்று இருக்கிறது.

மேலும், நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை ‘ரவீந்திர ஜெயந்தி’யாகக் கொண்டாடும் மே 9-ஆம் தேதியை, பதவியேற்பு விழாவுக்காக பாஜக தேர்ந்தெடுத்தது.

பதவியேற்பு விழா
பதவியேற்பு விழா

பிரிகேட் மைதானத்தில் இனிப்பு வகைகள் மற்றும் வங்காளத்தின் பாரம்பர்யச் சிற்றுண்டியான ‘ஜால்முரி’ ஆகியவற்றை விற்பனை செய்யும் சுமார் 20 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பதவியேற்பு விழாவிற்காக மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர்.

முன்னதாக சுவந்து அதிகாரி அளித்த பேட்டியில், மேற்கு வங்கத்தில் பயம் நீங்கி நம்பிக்கை பிறந்து இருப்பதாகத் தெரிவித்தார். சுவந்து அதிகாரி ஆரம்பத்தில் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து அரசியல் செய்து வந்தார்.

அதன் பிறகு மம்தா போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியிலும் பின்னர் தற்போதைய தேர்தலில் பாபனிபூர் தொகுதியிலும் அவரைத் தோற்கடித்து சுவந்து அதிகாரி இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.