`ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி; இது 130 கோடி பேரின் விருப்பம்!'- மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில், “புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படத்தை வைத்துவிட்டு, மறுபுறம் லட்சுமி தேவி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகளில் இரு தெய்வங்களின் உருவங்கள் இருப்பது நாடு செழிக்க உதவும்” எனக் கூறியிருந்தார்.

கெஜ்ரிவாலின் இத்தகைய கருத்து இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மேலும் இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்துடன், லட்சுமி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும் என்பது 130 கோடி இந்தியர்களின் விருப்பம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

கெஜ்ரிவால் – மோடி

மேலும் இது தொடர்பாக மோடிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படத்தை வைத்துவிட்டு, மறுபுறம் லட்சுமி தேவி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும் என 130 கோடி இந்தியர்களின் சார்பில் நான் இதை எழுதியிருக்கிறேன். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனபோதிலும், இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மேலும் இந்தியா இன்னும் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது.

ஒருபுறம், நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும், மறுபுறம் நமது முயற்சிகள் பலனளிக்க இறைவனின் ஆசீர்வாதமும் தேவை. சரியான கொள்கை, கடின உழைப்பு மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் இவற்றின் மூலம் மட்டுமே நாடு முன்னேறும் என வலியுறுத்தியிருந்தேன். தற்போது, இந்த விவகாரத்தில் மக்களிடத்தில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது. மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்” என கெஜ்ரிவால் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.