டாக்கா,
இந்தியா – வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது. வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மெஹதி ஹசன் மிராஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ரன்களை வேகமாக அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிக்கொண்டே இருந்தது.
அப்போது, ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிராஸ் விளாசினார். அது கேட்ச் நோக்கி சென்றது.
இதையடுத்து, அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் வேகமாக ஓடி சென்றார். அவர் கேட்சி பிடிக்க முயற்சித்தபோது பந்து அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது.
அதற்கு அடுத்த பந்தை ஹசன் மீண்டும் விளாசினார். அந்த பந்தும் கீப்பருக்கு பின்னால் பவுண்டரி எல்லையில் நின்றுகொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் நோக்கி சென்றது. ஆனால், அந்த பந்தை சுந்தர் கேட்ச் பிடிக்க முயற்சிக்கவில்லை.
அடுத்தடுத்து 2 கேட்ச் வாய்ப்புகள் நழுவிய நிலையில் அதிரடியாக விளையாடிய ஹசன் வங்காளதேச வெற்றிக்கு வழிவகுத்தார்.
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இந்திய அணி மீதும் கேப்டன் ரோகித் சர்மா மீதும் கேட்சை தவறவிட்ட கேஎல் ராகுல், கேட்ச் பிடிக்க முயற்சிக்காத வாஷிங்டன் சுந்தர் மீதும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர் தவறவிட்ட கேட்ச், இந்திய அணியின் தோல்வி குறித்து தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறுகையில், வெளிப்படையாக கூறவேண்டுமானால் இறுதிகட்டத்தில் கேஎல் ராகுல் தவறவிட்ட கேட்ச், வாஷிங்டன் சுந்தர் கேட்ச் பிடிக்க முயற்சிக்கவில்லை. அவர் கேட்ச் பிடிக்க முயற்சிக்காதது ஏன் என்று தெரியவில்லை. லைட் வெளிச்சம் காரணமாக இருக்கலாம் எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் பந்தை பார்த்திருந்தால் கேட்ச் பிடிக்க வந்திருக்க வேண்டும்.
அந்த கேள்விக்கு சுந்தர் தான் பதில் அளிக்கவேண்டும். ஒட்டுமொத்தமாக பீல்டிங் தரம் 50-50 (பாதிக்கு பாதி). பீல்டிங்கின் சிறந்த நாளும் அல்ல மோசமான நாளும் அல்ல. கடைசி நேரத்தில் அழுத்தம் காரணமாக நாம் சில பவுண்டரிகளையும் விட்டோம் என்று நான் நினைக்கிறேன்’ என்றார்.