இதென்ன? ஈரோடு மாநகராட்சிக்கு பெரிய சோதனை… அந்த 10 அடிப்படை பிரச்சினைகள் என்னாச்சு?

ஈரோடு கடந்த 2007ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்னதாக 1871ல் இருந்து பழம்பெரும் நகராட்சியாக செயல்பட்டு வந்துள்ளது. தற்போது 60 வார்டுகள் கொண்டு ஈரோடு மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. 2016க்கு பின்னர் மாநகராட்சிக்கு போதிய தலைமை இன்றி பணிகள் சரிவர நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் 2022 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

மீண்டும் திமுகவின் கோட்டை

இதில் திமுக 48, அதிமுக 6, மற்றவை 6 என வெற்றி பெற்றனர். இதன்மூலம் 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஈரோடு மாநகராட்சி மீண்டும் திமுக வசமானது. மேயராக திமுகவின் நாகரத்தினம் தேர்வு செய்யப்பட்டார். துணை மேயராக செல்வராஜ் தேர்வானார். இதையடுத்து முடங்கியிருந்த மாநகராட்சி பணிகள் வேகமெடுத்தன. இந்நிலையில் திமுக வசம் மாநகராட்சி வந்தும் பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எங்கே வளர்ச்சி திட்டப் பணிகள்?

கடந்த 10 ஆண்டுகளில் ஈரோடு எப்படி இருந்ததோ, அதேபோன்ற சூழல் தற்போதும் தொடர்வதாக பொதுமக்கள் சிலர் புகார் கூறுகின்றனர். பல இடங்களில் அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யாமல் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனராம். குறிப்பாக,

பாதாள சாக்கடை திட்டம்ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம்சாலைகள் மேம்பாட்டு பணிஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள்சாயக்கழிவு பிரச்சினைபொழுதுபோக்கு மையங்கள் இல்லாததுபோக்குவரத்து நெரிசல்குறுகிய சாலைகள் மற்றும் சேதமடைந்த சாலைகள்விரிவாக்கம் செய்யப்படும் பகுதிகளில் அடிப்படை வசதிகள்அடிப்படையான கட்டுமான வசதிகள் ஆகிய 10 விஷயங்கள் முதன்மையானதாக இருக்கின்றன.
ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம்

ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஒட்டி சமீபத்தில் தான் ஈரோட்டின் முக்கிய சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் எழுந்த முக்கிய பிரச்சினையாக தெரு நாய்கள் இருக்கின்றன.

நாய்க்கடியும், குப்பை வரியும்

இவற்றால் நாய் கடிக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தெருவில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து சென்று கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதவிர மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நீண்ட நாள் கோரிக்கைகளை ஈரோடு மாநகராட்சிக்கு பொறுப்பு வகிக்கும் திமுக தரப்பு பூர்த்தி செய்யுமா? எப்போது பணிகள் முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வரும்? போன்ற கேள்விகளை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.