மிட் கேப் & ஸ்மால் கேப் பங்குகள் Vs தங்கம்… முதலீடு செய்ய எது சரியான சாய்ஸ்..?

இந்தியாவை பொறுத்தவரையில் என்னதான் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் என்பது இருந்து வந்தாலும், பங்குச் சந்தை மீதான காதல் என்பது சற்றே முதலீட்டாளர்களுக்கு அதிகம். சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகம். ரிஸ்க் அதிகம் என பற்பல காரணங்கள் இருந்தாலும், நாளுக்கு நாள் பங்குச் சந்தை முதலீடு என்பது அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இது இந்திய முதலீடு என்பதோடு மட்டுமல்ல, சர்வதேச முதலீடுகளும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

பங்குச் சந்தை

குறிப்பாக சர்வதேச நாடுகள் பலவும் பொருளாதார மந்த நிலையை எதிர்க்கொள்ளலாம், பொருளாதாரம் என்னவாகுமா? பங்குச் சந்தையின் நிலை என்ன? என்று பல கேள்விகள் எழுந்தாலும், இந்தியாவில் அப்படி எந்தப் பாதிப்பும் இல்லை, மாறாக இந்தியப் பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றத்தில் உள்ளது. முதலீடுகள் அதிகரித்து கொண்டே உள்ளன. குறுகிய காலத்தில் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சற்றே அதிகம் இருந்தாலும், நீண்டகால நோக்கில் சற்றே வலுவானதாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்கே வெல்த் மேனேஜ்மென்ட்..!

இது குறித்து பங்கு தரகு நிறுவனமான எம்கே வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒர் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. அதில் நடுத்தர காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி என்பது பங்கு சந்தைக்கு ஆதரவாக இருக்கலாம். அதேசமயம் எல் நினோவின் தாக்கமும் சந்தையில் இருக்கலாம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

 இந்தியப் பங்குச் சந்தையானது புதிய உச்சத்தினை எட்டி வரும் இந்த நேரத்தில், எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம், என்னென்ன வாய்ப்புகள் சந்தையில் இருக்கிறது, அதில் உள்ள சவால்கள் என்னென்ன என்பது பற்றிய முக்கிய அம்சங்களையும் தெரிந்து கொள்வது அவசியம் என கூறியுள்ளது.

Asset allocation 2020

எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

பொதுவாக மிகப் பெரிய போர்ட்போலியோவாக இருந்தாலும் சரி, சிறிய போர்ட்போலியோவாக இருந்தாலும் சரி, அதனை பிரித்து முதலீடு செய்வதே (Asset Allocation) சரியான ஒன்று. அது வாடிக்கையாளர்களின் நிலையை பொறுத்து அமைய வேண்டும் என்கிறது.

தற்போதைய காலகட்டத்தில் சந்தையில் மூன்று முக்கிய முன்னணி முதலீடுகள் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒன்று பங்குச் சந்தை சார்ந்தது – நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்கள், இரண்டாவது  ஃபிக்ஸட் இன்கம் முதலீடுகள், மூன்றாவது பாதுகாப்பு புகலிடமான தங்கம். மேற்கண்ட முதலீடுகள் நல்ல லாபத்தினை தரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஈக்விட்டியில் லார்ஜ் கேப் பங்குகளை காட்டிலும், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் நல்ல லாபத்தினை கொடுக்கலாம் என சுட்டிக் காட்டுகிறது. 

பணவியல் கொள்கை

சமீபத்திய காலாண்டுகளாக மிகப்பெரிய அளவில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் பணவியல் கொள்கைகளில், சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் முக்கிய முடிவினை இனி வரும் மாதங்களில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற பெரிய விவாதமும் எழுந்துள்ளது. ஆக மத்திய வங்கிகளின் முடிவானது பங்கு சந்தைகளின் அடுத்த முக்கிய மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

இந்திய பங்குச் சந்தை

குறிப்பாக தொடர்ந்து பல காலாண்டுகளாக அதிகரிப்பட்டு வந்த வட்டி விகிதங்களில், தளர்வுகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையும் நிலவி வருகின்றது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு குறைக்கப்படலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். எப்படியிருப்பினும் இந்திய சந்தையினை பொறுத்தவரையில் குறுகிய கால போக்கு, நீண்டகால போக்கு என்ற இரு அம்சங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

 எம்கே குளோபல் இது குறித்து கூறுகையில் இது நிலையற்ற காலகட்டம். மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் வரையில், சந்தையில் பணப்புழக்கம் அதிகமாகவே இருக்கலாம். இது சந்தையினை உச்சத்திலேயே வைத்திருக்கலாம். 2023-ம் ஆண்டின் பிற்பாதியிலும், 2024-ம் ஆண்டின் தொடக்கத்திலும் சந்தை சற்றே மாற்றத்தை காண தொடங்கலாம் என கூறியுள்ளது.

பணவீக்கம்…

அமெரிக்காவில் பணவீக்கம், இந்தியாவினை போலவே சற்றே குறையத் தொடங்கியுள்ளது. எனினும் கூடவே இந்த போக்கு தொடருமா என்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது.

எல் நினோவால் சந்தைக்கு எதிரான தாக்கம் இருக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக உணவு பொருட்களின் விலை என்பது அதிகரிக்க கூடும் என்ற அச்சமும் உள்ளது. இது மீண்டும் பணவீக்கம் உச்சம் தொட காரணமாக அமையலாம். ஆக பணவீக்கத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மத்திய வங்கிகள் மீண்டும் அதில் கவனம் செலுத்தலாம். இது பணவியல் கொள்கையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பணவீக்கம்

பொருளாதார வளர்ச்சி எப்படியிருக்கும்?

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி என்பது சற்றே மந்த நிலையில் இருந்து வரும் நிலையில் எனர்ஜி உள்ளிட்ட, பல்வேறு கமாடிட்டிகளின் விலையானது குறையத் தொடங்கியுள்ளது. சர்வதேச பொருளாதார வளர்ச்சியானது 2023-ல் 2.8% இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது 2024-ல் 3% ஆக வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதே இந்தியாவினை பொறுத்த வரையில் பருவமழை காரணமாக தாக்கம் இருக்கலாம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. எனினும் தனியார் நிறுவனங்களின் நுகர்வு செலவினம் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம்.

பொருளாதார வளர்ச்சி

உலகளாவிய சந்தைகளை பொறுத்தவரையில் இந்திய சந்தைகள் சற்றே மதிப்புமிக்க சந்தையாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா வலுவான ஒரு நாடாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்தியாவில் அன்னிய முதலீடுகளின் வரத்து என்பது கணிசமாக இருந்து வருகின்றது. இந்திய முதலீட்டாளர்களும் தொடர்ந்து சந்தையில் முதலீடுகளை பெரியளவில் செய்து வருகின்றது. இது சந்தைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாகவே உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் நடுத்தர காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி என்பது வலுவாக இருக்கலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர். 2024-ம் நிதியாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் அறிக்கை, வரி வசூல், நுகர்வோர் குறித்தான முக்கிய தரவுகள் என பலவும் நல்ல வளர்ச்சியினை சுட்டிக் காட்டுகின்றன. ஆக இதுவும் சந்தைக்கு சாதகமானதொரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம்…

சமீபத்திய காலாண்டுகளாக தங்கம் ஒரு லாபகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், ஈக்விட்டிகளில் குறைந்துள்ள வருமானம் என பல காரணிகளுக்கு மத்தியில், தங்கம் கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம்

சீனாவின் பொருளாதாரமும் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பி வரும் நிலையில், தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம். டாலரின் போக்கும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், சர்வதேச அளவிலான அரசியல் பதற்றமும் தங்கத்துக்கு ஆதரவாக காணப்படுகின்றது. இந்திய சந்தையினை பொறுத்தவரையில் ரூபாய் மதிப்பானது இன்னும் கூடுதலாக ஆதரவளிக்கும் காரணியாக பார்க்கப்படுகிறது.

 சர்வதேச நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எது எப்படியோ தங்கமோ? ஈக்விட்டியோ கவனமாக அலசி ஆராய்ந்து பொறுமையாக முதலீடு செய்யுங்கள் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.