ஒலிம்பிக் மல்யுத்த தகுதி சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த பூனியா, ரவிகுமார்

சோனிபேட்,

ஒலிம்பிக் போட்டி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கிறது. இதில் மல்யுத்தத்திற்கான ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று (ஏப்ரல் 19-21), உலக ஒலிம்பிக் தகுதி சுற்று (மே 9-12) ஆகிய முக்கியமான போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி அரியானாவின் சோனிபேட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் நேற்று நடந்தது.

டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் ஏற்கனவே அமைக்கப்பட்ட இடைக்கால கமிட்டி தகுதி போட்டியை நடத்தியது.

இதில் இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மாதக்கணக்கில் போராடிய பஜ்ரங் பூனியாவின் செயல்பாடு தான் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தகுதி போட்டிக்காக ரஷியாவில் பயிற்சி மேற்கொண்ட பஜ்ரங் பூனியா 65 கிலோ எடைப்பிரிவில் களம் கண்டார். முதல் சுற்றில் ரவீந்தரிடம் போராடி வெற்றி பெற்ற பஜ்ரங் பூனியா அரைஇறுதியில், ரோகித் குமாரை எதிர்கொண்டார். இதில் எதிராளியின் பிடியில் சிக்கி திணறிய பஜ்ரங் பூனியா 1-9 என்ற புள்ளி கணக்கில் மோசமாக தோற்று வெளியேறினார்.

தோல்வியால் ஏமாற்றத்திற்குள்ளான அவர் உடனடியாக சாய் மையத்தை விட்டு கிளம்பினார். அவரிடம் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அதிகாரிகள் ஊக்கமருந்து சோதனைக்காக மாதிரி சேகரிக்க முயற்சித்தனர். ஆனால் அவர் 3-4-வது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாட கூட திரும்பி வரவில்லை.

2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான பஜ்ரங் பூனியா, அணி தகுதி போட்டியில் தோற்றதன் மூலம் அவரது பாரீஸ் ஒலிம்பிக் கனவு ஏறக்குறைய கலைந்து விட்டது என்றே சொல்லலாம். இதே போல் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான மற்றொரு நட்சத்திரம் ரவிகுமார் தாஹியாவும் தகுதி போட்டியில் வீழ்ந்தார். அவர் 57 கிலோ பிரிவில் 13-14 என்ற புள்ளி கணக்கில் அமன் செராவத்திடம் தோற்றார். ரவிகுமாரும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை தவற விடுகிறார். பஜ்ரங் பூனியாவை தோற்கடித்த ரோகித் குமார் இறுதி ஆட்டத்தில் சுஜீத் கலக்கலிடம் பணிந்தார்.

தகுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இந்திய அணியில் இடம் வழங்கப்படும். அந்த வகையில் அமன் செராவத் (57 கிலோ), சுஜீத் கலக்கல் (65 கிலோ), ஜெய்தீப் (74 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ), தீபக் நெஹரா (97 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ) ஆகியோர் இந்திய அணியில் இடத்தை உறுதி செய்துள்ளனர்.

பெண்கள் மல்யுத்த அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி பாட்டியாலாவில் இன்று நடக்கிறது. பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்துக்கு இதுவரை இந்தியா தரப்பில் அன்திம் பன்ஹால் (பெண்கள் 53 கிலோ பிரிவு) மட்டுமே தகுதி பெற்றிருப்பது நினைவு கூரத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.