சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிசா–மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வரும் 29 முதல் ஜூலை 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறில் 17 செ.மீ., வால்பாறையில் 13 செ.மீ., சின்னக்கல்லாறு, சின்கோனாவில் 12 செ.மீ., உபாசியில் 11 செ.மீ., நீலகிரி மாவட்டம் பார்சன் பள்ளத்தாக்கு, மேல் பவானி ஆகிய இடங்களில் 9 செ.மீ., தேனி மாவட்டம் பெரியாறில் 8 செ.மீ., கோவை மாவட்டம் பொள்ளாச்சி, தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணை ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.