விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி,

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். விஜய்யின் வாகனம் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மருத்துவமனையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.