மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

கோவை: மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தென் இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 3 நாள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், இம்மாநாடு தொடர்பாக வரவேற்பு குழுவின் கூட்டம் கோவை ரயில் நிலையம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் இன்று (நவ.14) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கே.செல்லமுத்து தலைமை வகித்தார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியது: “கோவை கொடிசியாவில் பிரதமர் பங்கேற்கும் இயற்கை விவசாயிகள் மாநாட்டிற்கு வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் தென் மாநிலங்களிலிருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர். இம்மாநாட்டில் தேசம் தழுவிய அளவில் கொள்கை பிரகடனத்தை தீர்மானமாக வெளியிட்டு பிரதமரிடம் அளிக்கவுள்ளோம்.

காவிரி உரிமைக்காக 50 ஆண்டுகாலம் தமிழக விவசாயிகள் போராடி பெற்ற உரிமை பறிபோய்விடுமோ? என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு நடுவர் மன்றங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், காவிரி நடுவர் மன்றம் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சி காலத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் கொண்ட அமைப்பாக பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்யப்பட்டது.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வழங்கிய பின் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம், தமிழகம் மறுசிராய்வு மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்திற்கு இணையான அமைப்பு கொண்ட நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து அக்குழுவிடமே மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தலையிடாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், தற்போது கர்நாடக அரசு சட்ட விரோதமாக வரவு திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய ஜல் சக்தி துறைக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் வழங்கியது. அப்போதே இச்செயல் சட்டவிரோதமானது. இதை ஏற்கக்கூடாது, அப்படி ஏற்கும் பட்சத்தில் ஆணையத்தின் மீதும் ஜல்சக்தி துறையின் மீதும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், தமிழக அரசு கர்நாடக அரசுக்கு எதிராக வழக்கை தொடர்ந்தது.

இன்றைக்கு உச்ச நீதிமன்றம் நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணான வகையில் கர்நாடக வரைவு திட்ட அறிக்கையை ஆணையம் விசாரிக்கலாம். தமிழகம் உரிய முறையில் முறையிடலாம். தமிழகத்தின் அனுமதி இல்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உத்திரவிட்டுள்ளது. இது நடுவர் மன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அவமதிப்பதற்கு முரணாக உள்ளது. தமிழக அரசு ஆரம்பத்திலேயே ஆணையத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

எனவே, தமிழக அரசு உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி இதனை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும். கர்நாடக முதல்வர் கருத்துக்கு தமிழக முதல்வர் தொடர்ந்து மவுனம் காப்பது ஏற்கதக்கதல்ல. இதேநிலைத் தொடர்ந்தால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.