மறைந்த கணவர் தர்மேந்திராவிற்கு டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டம் – ஹேமமாலினி

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாத இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் தனது 89வது வயதில் காலமான நிலையில் தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோர் இணைந்து கடந்த மாதம் 27ம் தேதி மும்பையில் பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில் ஹேமமாலினியோ அல்லது அவரது மகள்களோ கலந்து கொள்ளவில்லை.

தர்மேந்திராவின் பிரார்த்தனை கூட்டதில் கலந்துகொண்டவர்கள் ஹேமமாலினியின் வீட்டில் நடந்த பிரார்த்தனையிலும் கலந்துகொண்டனர். டிசம்பர் 8ம் தேதி தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள். இதையடுத்து சன்னி தியோலும், அவரது சகோதரர்களும் சேர்ந்து தர்மேந்திராவின் பிறந்தநாளை அவரது ரசிகர்களுடன் கொண்டாடினர். நடிகை ஹேமமாலினி தனது கணவரின் 90வது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளபக்கத்தில் பிரத்யேகமாகப் பதிவிட்டிருந்தார்.

தர்மேந்திரா – ஹேமமாலினி

அதில், “தர்மா ஜி எனது அன்பு இருதயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் எங்களை விட்டுச்சென்று இரண்டு வாரங்கள் ஆகின்றன. அதிலிருந்து படிப்படியாக நாங்கள் மீண்டு வருகிறோம்.

நாம் இவ்வளவு நாட்களும் இணைந்து வாழ்ந்ததற்காகவும், நமது அன்பின் அடையாளமாக அழகான இரண்டு குழந்தைகள் கொடுத்ததற்கும் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது அழகான நினைவுகள் என்றைக்கும் எனது இதயத்தில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது டெல்லியில் தனது அரசியல் நண்பர்களுக்காக தர்மேந்திராவிற்கு பிரார்த்தனை கூட்டத்திற்கு ஹேமமாலினி ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டத்தில் ஹேமமாலினியோடு அவரின் மகள்கள் இஷா தியோல், அஹானா மற்றும் அவர்களின் கணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

11ம் தேதி மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. முன்னதாக ஹேமமாலினி தன் கணவரின் நினைவாக தன் வீட்டில் கீதை வாசிப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். தர்மேந்திராவிற்கு புனே அருகே பண்ணை வீடு இருக்கிறது. அந்த பண்ணை வீட்டை தர்மேந்திராவின் ரசிகர்களுக்கு திறந்துகாட்ட அவரின் மகன்கள் முடிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.