சச்சினின் விநோத சாதனை! நோ பால், வைடு இல்லாமல் 3 பந்துகளில் 24 ரன்கள் அடித்தது எப்படி?

Sachin Tendulkar : இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் பல அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் பெயரில் பல நூறு சாதனைகள் உள்ளன. அவற்றில் சில இனி யாராலும் சர்வதேச கிரிக்கெட்டில் முறியடிக்கவே வாய்ப்புகள் இல்லாத சாதனைகள் ஆகும். சில விநோத சாதனைகளையும் சச்சின் தன்னுடைய பெயரில் வைத்திருக்கிறார். அந்தவகையில், ஒருமுறை நோபால், வைடு இல்லாமல் 3 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். மூன்று பந்துகளயும் சிக்சர் அடித்திருந்தால் கூட 18 ரன்கள் தான் கிடைத்திருக்கும். கூடுதலாக 6 ரன்கள் கிடைத்தது எப்படி?, அதை எப்படி செய்தார்? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

சச்சின் டெண்டுல்கரின் சாதனை

சச்சின் டெண்டுல்கர் 2002 ஆம் ஆண்டு இந்திய அணி, நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்திருந்தபோது இந்த சாதனையை செய்தார். இந்த ஒருநாள் போட்டி பற்றி மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் மிக மிக அதிரடியாக இருந்தது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான இன்னிங்ஸ் என்றுகூட சொல்லலாம். சச்சினே இந்த இன்னிங்ஸை தன்னுடைய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஒருநாள் போட்டி டிசம்பர் 4, 2002 அன்று கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 27 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து, ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். இந்த இன்னிங்ஸில் ​​சச்சின் 3 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

போட்டி நடந்து எங்கே?

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டி தலா 10 ஓவர்கள் கொண்ட நான்கு இன்னிங்ஸ்களாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவும் நியூசிலாந்தும் தலா 10 ஓவர்கள் கொண்ட இரண்டு இன்னிங்ஸ்களை விளையாட இருந்தன. இரு அணிகளும் 11 வீரர்களுக்கு பதிலாக 12 வீரர்களுடன் விளையாடின. ஐசிசி புதிய விதிமுறைகளை பரிசோதனை செய்யும் போட்டியாகவும் இது அமைந்தது. இந்த போட்டியில், ஸ்கிரீனுக்கு முன்னால் பந்து வீச்சாளருக்குப் பின்னால் உள்ள பகுதியின் ஒரு பகுதி “Max Zone” என்று அறிவிக்கப்பட்டது. இந்த பகுதியில் பந்துகளை அடிப்பவர்களுக்கு இரட்டை ரன்கள் வழங்கப்பட்டது, அதாவது ஒரு பவுண்டரிக்கு 4 ரன்களுக்கு பதிலாக 8 ரன்களும், ஒரு சிக்ஸருக்கு 6 ரன்களுக்கு பதிலாக 12 ரன்களும் வழங்கப்படும்.

சச்சின் 3 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தது எப்படி?

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 123 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்தியா களமிறங்கியது. இன்னிங்ஸைத் தொடங்கிய சச்சின் டெண்டுல்கர் கிறைஸ்ட்சர்ச்சை தன்னுடைய பேட்டிங் புயலால் அசரடித்தார். அவர் வெறும் 27 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து பிரம்மிக்க வைத்துவிட்டார். Max Zone பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பந்துகளை அடித்து சச்சின் டெண்டுல்கர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த மூன்று பந்துகளிலும் சச்சின் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் மற்றும் 2 ரன்களை எடுத்தார். ஆனால் Max Zone விதியின் காரணமாக, அவரது ஸ்கோர்கள் 8, 12 மற்றும் 4 ரன்களாகக் கணக்கிடப்பட்டன. இதன் மூலம் அவர் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் 24 ரன்கள் எடுத்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்தியா தோற்றது

சச்சின் டெண்டுல்கரின் அதிரடியான இன்னிங்ஸ் இருந்தபோதிலும், டீம் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது. நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்த நிலையில், சச்சினின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.