தெருநாய்களைப் பிடித்துச்சென்று ரத்தத்தை உறிஞ்சி விற்பனை; கால்நடை மருத்துவர் மீது பகீர் புகார்

பொதுமக்கள் நாய்கள் உட்பட வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக அன்பு மற்றும் பாசம் வைத்திருப்பார்கள். வளர்ப்புப் பிராணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ அதன் உரிமையாளர்கள் பெரிய அளவில் மனவேதனைக்கு ஆளாவார்கள்.

வளர்ப்புப் பிராணிகளின் சிகிச்சைக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா நாய்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். ஒருமுறை தனது நாயின் கால் உடைந்துவிட்டது என்பதற்காக அதனை அமெரிக்காவிற்குக் கொண்டு சென்று ஆப்ரேசன் செய்து கொண்டு வந்தார்.

அதன் பிறகு ரத்தன் டாடா வளர்ப்புப் பிராணிகளுக்காகவே மும்பையில் தனி மருத்துவமனையும் கட்டி இருக்கிறார். ஆனால் ஐதராபாத்தில் தெருநாய்களைப் பிடித்து சென்று அதன் ரத்தத்தை உறிஞ்சி எடுத்து அதனை பணமாக்கி வருகிறது ஒரு கும்பல்.

தெருநாய்கள்
தெருநாய்கள்

அங்குள்ள ஷேக்பெட் என்ற இடத்தில் செயல்படும் வளர்ப்புப் பிராணிகள் மருத்துவமனனையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் தெருநாய்களைப் பிடித்துச்சென்று அடைத்து வைத்து ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார்கள் தந்துள்ளனர்.

ஐதராபாத் முழுவதும் இருந்து பிடித்து செல்லப்படும் இந்தத் தெருநாய்களுக்குச் சரியான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி கூட கொடுக்காமல் அடைத்து வைத்து அடிக்கடி ரத்தம் எடுத்து அதனைத் தேவைப்படும் வளர்ப்புப் பிராணி உரிமையாளர்களுக்கு ரூ.18000 முதல் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதோடு அந்த மருத்துவமனையில் அனுமதி பெறாத விலங்குகள் ரத்த வங்கி செயல்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கால்நடைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். ஆனால் கால்நடைத்துறை இன்னும் இது குறித்து விசாரிக்க தொடங்கவில்லை என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே தெருநாய்களுக்கு பொது இடத்தில் உணவு வழங்குவது தொடர்பான பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.