எனது இதயம் நொறுங்கியது… லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

புதுடெல்லி:
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவால் தனது இதயம் நொறுங்கியதாக கூறி உள்ளார்.
லதா மங்கேஷ்கர்
‘லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்த செய்தி, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளதைப் போலவே எனது இதயத்தையும் நொறுக்கிவிட்டது. அவரது பாடல்கள் உணர்வுகளை வெளிப்படுத்தின. அவரது சாதனைகள் ஒப்பிட முடியாதவை.  
ஒரு தெய்வீகக் குரல் இப்போது நிரந்தர அமைதியாகிவிட்டது. ஆனால் அவருடைய மெல்லிசைகள் என்றைக்கும் அழியாமல் இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்கள்’ என ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
லதா மங்கேஷ்கரின் பாடல்கள் உணர்வுகளை பிரதிபலிப்பவை என்றும், இந்தியாவின் வளர்ச்சி மீது ஆர்வம் கொண்டவர்; வலுவான, வளமான இந்தியாவை காண விரும்பியவர் என்றும் பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியாவில் யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை லதா மங்கேஷ்கர் விட்டுச் சென்றுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.