ஹிஜாப் சர்ச்சை: மதச்சார்பின்மை எனும் பாசாங்கு!

ஒரு மாதத்துக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் புர்கா அணிந்து வந்த ஆறு இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது சர்ச்சையைத் தோற்றுவிக்க, இந்துத்துவக் குழுக்கள் இஸ்லாமிய மாணவர்கள் தம் மதச்சின்னங்களை அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரச்சாரம் செய்தனர். அடுத்து ஹிஜாப்பைக் கண்டிக்கும் நோக்கில் சில பள்ளி மாணவர்கள் காவித்துண்டுடன் பள்ளிக்கு வந்து பிரச்சினை கிளப்பினர். இரு நாட்களுக்கு முன்பு குந்தாபூரில் உள்ள பந்தர்கர்ஸ் கலை இலக்கிய கல்லூரியில் 40 புர்கா அணிந்து வந்த மாணவிகள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். எவ்வளவு கெஞ்சியும் வாதிட்டும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை நிர்வாகம். இதை அடுத்து கர்நாடகாவை ஆளும் பாஜக அரசு புர்கா, ஹிஜாப் ஆகியவற்றை இஸ்லாமிய மாணவியர் அணிவதைத் தடை செய்துள்ளது.

இவ்வாறு இஸ்லாமியருடைய மத உரிமையைப் பறித்து மதத் துவேஷத்தை வளர்க்கிற இந்துத்துவர்களிடம் நீங்கள் சென்று ‘ஹிஜாப் அணிவது சிறுபான்மையினராக அவர்களது மத உரிமை அல்லவா?’ என்று கேட்டால் ‘இந்துக்களின் மத உரிமைகளுக்கு இதே போல இடம் கொடுப்பீர்களா?’ எனத் திரும்பக் கேட்கிறார்கள்; ‘ஹிஜாப் எனும் ஆணடிமைத்தனத்தை முற்போக்காளர்களே நீங்கள் ஆதரிக்கலாமா?’ என்றும் கேட்கிறார்கள். இந்த விஷமத்தனத்தை எப்படி எதிர்கொள்வது? அதற்கு மதச்சார்பின்மை கருத்துநிலை மட்டும் போதுமா? போதாது, மதச்சார்பின்மையை நாம் மறுவரையறை பண்ண வேண்டும்.

மதச்சார்பின்மை பொதுவாக இருவகைப்படும். ஒன்று முழுமையான மதச்சார்பின்மை. அதாவது பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய தேசங்களில் உள்ள மதச்சார்பின்மை. அங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே சமத்துவம், முற்போக்குச் சிந்தனை ஆகியவை மக்களின் அரசியல் பண்பாட்டில் ஊடுருவி இருந்ததால் மக்களாட்சி தோன்றியபோது அரசு நிர்வாகத்திலோ பொதுவிடங்களிலோ மதக்குறியீடுகளோ வேறுவித மதவாதக் குறுக்கீடுகளோ இருக்கக் கூடாது என முடிவெடுத்தார்கள். இது சமரசமற்ற மதச்சார்பின்மை.

பிரதமர் மோடி

இந்தியா போன்ற நாடுகளில் உள்ளது போலியான மதச்சார்பின்மை. இங்கு கல்வி நிலையங்களிலிருந்து அரசாங்கத் தலைமைவரை மதம் குறுக்கிடாத இடங்கள் இல்லை. இங்கு ஒரு பிரதமர் இந்துமதக் கோயில் விழாக்களில் வெளிப்படையாகப் பங்கெடுத்து அதைத் தேர்தல் பிரச்சாரமாக்கிக்கொள்கிறார். தேர்தல் பிரச்சாரங்களில் காவி நிற ஆடைகள் அணிந்து உலா வருகிறார். இது ஏதோ பாஜக தலைவர்களுக்கு மட்டுமேயான மதச்சார்பு அரசியல் அல்ல, இதற்கு முன்பு காங்கிரஸும் அப்படியே இருந்தது.

மோடியின் முன்னோடி இந்திரா

இந்திரா காந்தி
இந்தியாவின் வலுவான தலைவராக உருவானது இந்திய-பாக் போருக்குப் பிறகே. அதனாலே அவர் “காளி” என்று அழைக்கப்பட்டார். தன்னை அவர் இந்துக்களின் வீராங்கனையாகக் கட்டமைத்து கட்சிக்குள் அதிகாரப் போட்டியை இல்லாமல் பண்ணி தன்னிகரற்ற தலைவராக உருப்பெற முயன்றார். மோடி இன்று தன்னை கோயில்களுக்கு சென்று பூஜை செய்கிறவராக, பனிமூடிய இமயமலையில் தவம் புரிகிறவராகச் சித்தரித்து படமெடுத்துக்கொள்வதை இந்திய அரசியலில் முதலில் ஆரம்பித்து வைத்தவர் இந்திர காந்திதான்.

நாவலாசிரியர் அஜாஸ் அஷ்ரப் ஒரு கட்டுரையில் இதைப் பற்றி விவாதிக்கையில் எமெர்ஜென்ஸிக்குப் பின்னர் 1977இல் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னரே இந்திரா காந்தியின் அரசியல் வெளிப்படையான இந்து மதவாதத்தை நோக்கிப் போனது என்கிறார். அடுத்த தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் தன்னை ஒரு இந்துமதத் தலைவியாக வலுவாக நிலைநிறுத்த முயன்றார். குறிப்பாக பஞ்சாபில் அகாலி தளம் கட்சியை ஒழிப்பதற்காக சீக்கிய தேசியவாதிகளைத் தூண்டிவிட்ட இந்திரா பின்னர் இந்த சீக்கிய தேசியவாதிகளையே ஒழிப்பதற்காக ஆப்பரேஷன் புளூஸ்டார் எனும் மிக மோசமான தாக்குதலை சீக்கிய வழிபாட்டுத்தலத்தின் மீதும் மக்கள் மீதும் தொடுத்ததைப் பற்றி அறிவோம்.

ஆனால் இதன் பிறகு உத்தராகண்டில் உள்ள கார்வால் மாவட்டத்தில் உரையாற்றிய இந்திரா காந்தி “சீக்கியர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடம் இருந்து இந்து தர்மம் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது, ஆகையால் இந்து மதத்தைக் காப்பாற்ற இந்துக்கள் திரள வேண்டும்” என்று கூறினார். 1983இல் காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடக்கப் போகும் சமயம் இந்திரா மீண்டும் மதவாதத்தை கையில் எடுத்தார். காஷ்மீர் சட்டசபை மறுகுடியமர்த்தல் சட்டவரைவு ஒன்றை நிறைவேற்ற முயன்றுவந்தது. இதை பாகிஸ்தானில் இருந்து இஸ்லாமியரை ஜம்மு, காஷ்மீருக்கு திரும்ப அழைத்து வந்து அவர்களுக்கு இந்துக்களின் நிலத்தைப் பிடுங்கி அளிக்க ஜம்மு காஷ்மீர் அரசு திட்டமிடுவதாகத் திரித்து அப்பட்டமான மதவாதப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார் இந்திரா. ஜம்முவில் உள்ள அதிகபட்ச இந்துக்களின் ஓட்டுக்களைக் கவர்வதே அப்போது அவரது திட்டம். 2014இல் பாஜக அரசு ஜம்மு, காஷ்மீரை மதத்தின் அடிப்படையில் பிரித்து வாக்கு சேகரித்து முயன்று வெற்றி பெற்றதே அதே போன்ற வெற்றியை இந்திராவும் அன்று பெற்றார். அன்று 46 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ்.

கடந்த காலக் கலவரங்கள்

1981இல் தமிழகத்தின் மீனாட்சிபுரத்தில் தலித்துகள் இஸ்லாத்துக்கு மதமாற்றப்பட்டார்கள் எனும் சர்ச்சை வெடித்த போது இந்திராவின் அரசு அதை ஒரு மதவாத கோணத்தில் தான் பார்த்தது. “அரசியல் நோக்கம் கொண்ட ஒரு சதித்திட்டம் இந்த மதமாற்றத்தின் பின்னுள்ளது” என அப்போதைய உள்துறை அமைச்சர் ஜெயில் சிங் குற்றம்சட்டினார். 1980இல் இந்திரா ஆட்சிக்குத் திரும்பியதும் மொராபாத், மீரட், பம்பாய், பரோடா உள்ளிட்ட இடங்களில் மதக்கலவரங்கள் நடந்தன; நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இக்கலவரங்களில் கொல்லப்பட்டனர். இந்திராவின் அரசு ஆர்.எஸ்.எஸ்.ஸின் மீது பழிசுமத்தினாலும் இக்கலவரங்களை கட்டுப்படுத்தவோ ஆர்.எஸ்.எஸ்.ஸை தண்டிக்கவோ, தன் கட்சிக்குள்ளேயே இக்கலவரங்களை ஒருங்கிணைத்தவர்களை வெளியேற்றவோ அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, மறுவருகைக்குப் பிறகே தான் இந்துக் கோயில்களுக்குச் சென்று பூஜை செய்வதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று இந்திரா அக்கறை காட்டினார். அகில இந்திய வானொலியில் தினமும் வேதம் ஓதுவது, புராணங்கள் குறித்து பஜனைகள் பாடப்படுவது ஆகியவற்றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்திரா காந்தி

1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திரா சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலையானதும் ‘இந்துத் தலைவரைச் சீக்கியர்கள் கொன்றுவிட்டார்கள்’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸார் முன்னெடுத்தனர். தனது தாயைப் பற்றி உரையாற்றுகையில் அவரை “பாரத்மாதா” என்றழைத்தார் ராஜீவ் காந்தி. தூர்தர்ஷன் அப்போது தொடர்ந்து இந்திராவின் உடலை நேரலையாக காண்பித்து கோபத்தை வளர்க்கும் மறைமுகப் பணியைச் செய்தது என்கிறார் வித்யா பூஷன் ராவத். இதை அடுத்துப் பெரும் எண்ணிக்கையில் இனவாதப் படுகொலைகள் தில்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் நடந்தன. இந்த இனப்படுகொலையை காங்கிரஸ் தலைவர்கள் வாக்காளர் பட்டியல், முகவரிகளுடன் நிறைய குண்டர்களை அனுப்பி போலிசாரின் உதவியுடன் ஒருங்கிணைத்தனர்.

அதன் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் 404 இடங்களுடன் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தது.

ராவத் மற்றொரு கேள்வியை எழுப்புகிறார் – காந்தியை ஒரு சித்பவன் பிராமணர் கொல்லுகிறார். ஆனால் இதை ஒட்டி பிராமண சமூகத்துக்கு எதிரான பெருங்கோபம் ஒன்றும் காங்கிரஸுக்குள் வெடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகாசபா ஆதரவாளர்கள் வேட்டையாடப்படவில்லை. ராஜீவ் காந்தி ஈழத்தமிழ் போராளிகளால் கொல்லப்பட்டதும் தமிழ் சைவர்களுக்கு எதிரான வன்முறை இந்தியா முழுக்க வெடிக்கவில்லை. மாறாக இந்திய அரசு மறைமுகமாக ஈழப்போரில் சிங்கள பெரும்பான்மை அரசுக்கு ஆதரவளித்ததுடன் நிறுத்திக்கொண்டது. ஒருவேளை இஸ்லாமிய குழுக்கள் இவ்விரு தலைவர்களையும் கொன்றிருந்தால் காங்கிரஸ் இவ்வாறு அமைதியாக எதிர்கொண்டிருக்குமா என ராவத் கேட்கிறார். இந்த பிரச்சினையை இப்படி அன்றைய அரசியல் சூழல், காங்கிரஸ் கட்சித் தலைமையின் உடனடித் தேவைகளை கருத்திற் கொள்ளாமல் நாம் சுருக்கிப் பார்க்க முடியாதுதான். ஆனால் காங்கிரஸ் தனக்குத் தேவைப்படும் போதெல்லாம் இந்து அஸ்திரத்தைத் தூக்கத் தயங்காது என்பதையும் நாம் மறுக்க முடியாது.

காந்தியின் அணுகுமுறை

இந்திரா காந்திக்கு முன்பு என்று எடுத்துக்கொண்டால் மகாத்மா காந்தி தன்னை இந்துக்களின் தலைவராகவே முன்வைத்தார். நீங்கள் உடனே அவர் இஸ்லாமியருக்கும் கிறிஸ்துவர்களுக்கும் தன் பிரார்த்தனைகளில் இடம் கொடுக்கவில்லையா என்று கேட்பீர்கள். ஆனால் அவர் சிறுபான்மை மதத்தவர்களையும் ஆன்மீக அளவில் இந்துக்கள் என்றே கருதினார். அதாவது நீங்கள் என்ன மதத்தை பின்பற்றினாலும் நீங்கள் இந்தியாவில் பிறந்து வாழும் பட்சத்தில் வைஷ்ணவரே (அதாவது காந்தியின் பார்வையில் இந்துமதம் வைணவம் மட்டுமே.) அவர் தன்னை ஒரு இந்துமத சீர்திருத்தவாதி என்றே நம்பினார். காந்தி மட்டுமல்ல அந்த காலத்தில் கணிசமான காங்கிரஸ் தலைவர்களும் மதநம்பிக்கைகளின்படி சிந்தித்த கடும் மரபுவாதிகளாகவே இருந்தனர்.

மகாத்மா காந்தி

காந்தி எனும் இந்தியப் போராட்ட இயக்கத்தின் மகத்தான தலைவர் ஏன் இப்படி மதவாதியாக இருந்தார் என்றால் அவருக்கு முன்னரும் 19ஆவது, 20ஆவது நூற்றாண்டுகளில் பிரித்தானிய அரசுக்கு எதிராகப் போராடிய வட இந்தியத் தலைவர்கள் நன்கு படித்த இந்து மதச் சீர்திருத்தவாதிகளாகவே இருந்தனர். காந்தி அவர்களின் தொடர்ச்சியே. அவர்களே சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததால் இந்தியா ஒரு முழுமையான மதச்சார்பின்மை தேசமாக இல்லாமல் இந்துமத சார்புள்ள மதச்சார்பின்மையை பெயரளவுக்கு மட்டுமே கடைபிடிக்கும் தேசமானது.

இந்துத்துவமும் காங்கிரசும்

இஸ்லாமியரை காங்கிரஸ் செல்லம் கொஞ்சுகிறது எனும் குற்றச்சாட்டை இந்திரா காந்தி காலத்திலேயே இந்துத்துவர்கள் எழுப்பிவந்தனர். அதற்கு ஈடுகட்டவே அவர் தன்னை இந்துக்களின் வீராங்கனையாகக் காட்டிக்கொள்ள முயன்றார். ஷா பானோ வழக்கில் ராஜீவ் காந்தி இஸ்லாமியருக்குச் சாதகமாக முடிவெடுத்தார் எனும் குற்றச்சாட்டு இந்துத்துவர் தரப்பிலிருந்து எழுந்தபோது அவர் அதற்கு ஈடுகட்டுவதற்காக எண்பதுகளின் பிற்பகுதியில் அயோத்தியில் ராமர் கோயிலின் பூட்டை உடைத்து பூஜை பண்ண அனுமதித்தார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது ரத ஊர்வலங்களை அத்வானி நடத்த அவர் மறைமுக அனுமதி அளித்தார். இது தொண்ணூறுகள் முழுக்க இந்துத்துவ எழுச்சி உருவாக, மதவாதக் கலவரங்களில் இஸ்லாமியர் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதற்கு வழிவகுத்தது. மும்பை போன்ற நகரங்களில் குண்டுகள் வெடிக்கப்படுவதற்கும் தீவிரவாதம் வளர்வதற்கும் காரணமாகியது. ராஜீவ் தன் தற்காலிக அரசியல் அனுகூலத்துக்காக வளர்த்துவிட்ட இந்துத்துவக் கொடுக்கு வளர்ந்து பின்னர் காங்கிரஸையே தாக்கி வீழ்த்தியதும் நடந்தது.

1999இல் காங்கிரஸின் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் என்ன தெரியுமா? “இந்தியாவில் மதச்சார்பின்மையை உறுதி செய்ய சிறந்த வழி இந்துமதத்தை முன்னெடுப்பதே.” இந்தத் தீர்மானத்தின் மூளைகளில் ஒருவரான வி.என். காட்கில் “இஸ்லாமியரைத் தொடர்ந்து ஆற்றுப்படுத்தும்போது இந்துக்களே இந்நாட்டில் பெரும்பான்மை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. … இஸ்லாமியர் வெறும் 18% தாம். அவர்கள் எல்லாருமே நமக்கு வாக்களித்தாலும்கூட நாம் ஆட்சியமைக்க முடியாது. அதனால் நாம் 82% மக்களின் செண்டிமெண்டுகளைத் தொடர்ந்து உதாசீனிக்க முடியாது” என்று கூறினார். இது அப்படியே பாஜகவின் குரலைப் போன்று இல்லையா?

2014இல் காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தபோது ஏ.கே ஆண்டனி தலைமையில் தேர்தல் முடிவுகளை அலசுவதற்கு கூடிய குழு தோல்விக்கு கண்டடைந்த காரணம் என்ன தெரியுமா? காங்கிரஸ் இஸ்லாமியருக்கு சாதகமான கட்சி எனும் பிம்பம்தான் கட்சியின் பின்னடைவுக்கு காரணம் என்றது அக்குழு. உண்மையில் என்ன நடந்தது? காங்கிரஸ் கட்சியின் தொடர் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டன. மன்மோகன் சிங்கை ஒரு வலுவான தலைவராக, பிரதமராக முன்னிறுத்தி காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. கார்ப்பரேட் முதலாளிகள் பாஜகவை ஆதரித்தனர். ஊடகங்களும் பாஜகவின் பிரச்சாரத்துக்கு ஒத்துஊதின ஆனால் ஒட்டுமொத்தப் பழியையும் காங்கிரஸ் குழு எப்படி 18% மக்கள் மீது சுமத்தியது என்று பார்த்தீர்களா?

2018 ஜூலையில் இன்குலாப் எனும் உருது பத்திரிகையில் வந்த அறிக்கையின்படி ராகுல் காந்தி ஒரு கட்சி விவாதத்தின்போது “பாஜக நம்மை இஸ்லாமிய ஆதரவுக் கட்சி என்று சொன்னால் அப்படியே இருக்கடும், காங்கிரஸ் இஸ்லாமியக் கட்சிதான்” என்று கூறியிருக்கிறார். இது நான்கு சுவர்களுக்கு நடுவே பேசிய பேச்சு. 2019இல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் துவங்கும்போது, நவம்பர் மாதம் காங்கிரஸ் மீண்டும் இந்து முழக்கத்தை எழுப்பியது. “நான் ஒரு பிராமணன்” என்று ராகுல் வெளிப்படையாக அறிவித்தது அப்போது சர்ச்சையானது. 2021 டிசம்பர் மாதம் ஜெய்பூரில் பேசிய ராகுல் “இந்தியா இந்துக்களின் தேசம்.” என்று அறிவித்தார். கூடவே இந்து மதம் வேறு, இந்துத்துவா வேறு. இந்துக்களுக்கு இந்துத்துவா தேவையில்லை, இந்து மதமே போதும் என்றார். இந்துக்களின் ஆட்சியே வர வேண்டும், இந்துத்துவர்களின் ஆட்சி அல்ல என்றார். இது மேம்போக்காக ஒரு முற்போக்கான கருத்தாகத் தெரியக்கூடும், ஆனால் அதன் அடியாழத்தில் இருப்பது மதச்சார்பு அரசியலே. இது இந்துக்களின் தேசம் என்றால் இந்நாட்டில் வாழும் கிறித்துவர்களும் இஸ்லாமியரும் கடலில் குதித்துவிட வேண்டுமா?

இந்திராவின் காலத்திலிருந்து இதுவரையில் இந்துத்துவர்களுக்கு மாற்றாக, சரணாலயமாக காங்கிரஸை நம்பியிருந்த சிறுபான்மை மதத்தவரை காங்கிரஸ் எப்படி நடத்தி வந்துள்ளது பாருங்கள். கடந்த ஐம்பதாண்டுகளாக இந்நாட்டில் இஸ்லாமியராக இருக்கும் ஒருவர் இதையெல்லாம் பார்க்கையில் இந்நாடு மதச்சார்பற்றது என நம்புவாரா?

காங்கிரஸின் மதச்சார்பின்மை எத்தகையது?

காங்கிரஸின் சந்தர்ப்பவாத இந்து மதவாத அரசியலை நான் இங்கே விவரிக்க முக்கியக் காரணம் இந்தியாவின் பிரதான மதச்சார்பற்ற கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்வது அக்கட்சியே என்பதால்தான். இந்தியாவின் (அதாவது காங்கிரஸின்) மதச்சார்பின்மையானது இந்துமத அடையாளங்களை முன்னிறுத்துகிற, பிராமணிய, சமஸ்கிருதப் பண்பாட்டை எல்லா மாநிலங்கள் மீதும் திணிக்கிறது. சிறுபான்மையினரையும் இந்துக்களே பிரதிநிதித்துவப்படுத்துவோம் எனக் கோருவதாக காங்கிரசின் மதச்சார்பின்மை உள்ளது. 1947இலிருந்து இதுவரை ஒரே ஒரு சிறுபான்மை மதத்தவராவது இந்தியாவின் பிரதமாக ஆனதுண்டா? மதச்சார்பற்ற நாடென்றால் அந்தச் சார்பின்மை தலைமையின் தேர்விலும்தானே தெரிய வேண்டும்? ஏன் இல்லை? சோனியா காந்திக்கு அந்த வாய்ப்பிருந்தது, ஆனால் அவர் கிறிஸ்துவர் என்கிற பிரதான காரணத்துக்காகவே தன்னை விலக்கிக்கொண்டார்.

சரி இந்துக்களே பெரும்பான்மையினர், அதனால் அவர்களின் பிரதிநிதியே பிரதமராக வாய்ப்பு அதிகம் என நீங்கள் கூறலாம். இது சரியெனில் நேரு துவங்கி திரும்பத் திரும்ப ஏன் பிராமண சமூகத்தினரே அதிகம் பிரதமராகியுள்ளனர்? அவர்கள் எண்ணிக்கையளவில் சிறுபான்மையினர் அல்லவா?

மத ஆதிக்கத்தின் பிரச்சினை

இந்தப் பிரச்சினை மத ஆதிக்கம் கொண்ட எல்லா நவீன தேசங்களின் அரசியலிலும் உள்ளது என அமர்தயா சென் மதச்சார்பின்மை குறித்த ஒரு கட்டுரையில் (Understanding Secularism, “”The Argumentative Indian”) குறிப்பிடுகிறார். அவர் பிரான்ஸில் ஹிஜாப்பைப் பொதுவெளியில் அணிவதைத் தடைசெய்து சட்டம் கொண்டுவந்தபோது ஏற்பட்ட சர்ச்சையின்போது, என்னதான் பிரான்ஸ் தேசம் மதக் குறுக்கீடுகளை அனுமதிப்பதில்லை என்றாலும் மறைமுகமாக அங்கு கிறித்துவ ஆதிக்கம் உண்டே, அது மதசார்பு நிலை அல்லவா என்று கேட்கிறார். அதாவது அவர்கள் பொதுவெளியில் என்னதான் மதத்தைத் திணிக்கக் கூடாது என்று சொன்னாலும் அதிக எண்ணிக்கையில் தேவாலயங்கள் செயல்படுவதையும், மரபாளர்களும் பிற்போக்காளர்கள் மறைமுகமாக அரசு நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவதையும் பிரான்ஸால் தடுக்க முடியவில்லையே என்கிறார். அதாவது அவர்களுடைய மதச்சார்பின்மையும் முழுமையானதோ உண்மையானதோ அல்ல. அதுவும் பாசாங்கானதே.

நிஜமான மதச்சார்பின்மையைக் கொண்டுவர வேண்டுமென்றால் மதங்களை ஒழிக்க வேண்டும். அது முடியாவிட்டால் மதங்கள் மிக பலவீனமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மெய்யியல் தேடலை ஊக்குவிக்கும் நோக்கில் பௌத்தம் போன்ற சாராம்சவாத-எதிர்ப்பு, கடவுள் மறுப்பு தத்துவங்களை மக்களுக்குப் பள்ளியிலிருந்தே போதிக்கலாம். இது சமத்துவத்தைக் கொண்டு வரும். ஆனால் உலகில் எந்த தேசத்தாலும் இதை செய்ய முடியவில்லை. ஏனென்றால் மக்களாட்சி அரசுகளை நடத்தும் கட்சிகளுக்கு நிதியளிக்கும், நாட்டின் பொருளாதாரத்தை கையில் வைத்திருக்கும் முதலாளிகள் தீவிர மத ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். மதத்தை விட்டுக்கொடுத்தால் நாட்டில் கிளர்ச்சி வந்துவிடும், அது மக்களைச் சுரண்டுவதில் தமக்கு இடையூறாகும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். பொதுவாக அநீதியை, ஏற்றத்தாழ்வைப் பாதுகாப்பதில் மதங்கள் அளப்பரிய பங்கை ஆற்றுகின்றன. அவை நம்மிடம் திரும்பத் திரும்ப சொல்லுவது “வானுலகில் சமத்துவமும் நீதியும் கிடைக்கும், அதனால் அமைதியாக இருங்கள்” என்பதே.

இங்கிருந்து நாம் ஹிஜாப்புக்கு வருவோம். முற்போக்கு மதவாதிகள் (உ.ம். காங்கிரஸார்) சிறிய அளவிலாவது சமத்துவம் வேண்டும் என நினைக்கிறார்கள். தாம் பெரும்பான்மை மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், மத, சாதிச் சின்னங்களை அணிகிறோம் எனும் குற்றவுணர்வு காங்கிரசாருக்குச் சிறிதேனும் உண்டு. அதனாலே அவர்கள் சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை. இந்துக்களே பொதுவெளியில் தம் மதத்தை முன்னிறுத்துகையில் இஸ்லாமியரை மட்டும் தடுத்தால் அது முரணாகத் தெரியும் இல்லையா?

மதமும் கல்வியும்: வரலாறு காட்டும் உண்மை

மதமும் கல்வியும் நமது தேசத்தில் பல நூற்றாண்டுகளாகவே பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. இந்தியாவில் முன்பு முக்கியமான கல்வியாளர்களாக பௌத்தர்களும் சமணர்களும் இருந்தனர் என்பதை அறிவோம். முகலாய ஆட்சி இந்தியாவில் தோன்றிய பிறகு அவர்கள் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதில் ஆர்வம் செலுத்தினர். குதுப் உதின் அய்பெக் எனும் முகலாயர்களுக்கு முன்பான இஸ்லாமிய மன்னரின் காலத்திலேயே இந்த பணிப் துவக்கப்பட்டது என்கிறார்கள். கவனிக்கத்தக்க விசயம் இந்த இஸ்லாமிய நிறுவனங்களில் மதக்கல்வியுடன் நிறுத்திக்கொள்ளாமல் அறிவியல், கணிதம், வானவியல் போன்ற அறிவுத் துறைகளிலும் ஆர்வம் காட்டினர், அக்பரின் ஆட்சியில் இந்து மத சமஸ்கிருத நூல்களும் கற்பிக்கப்பட்டன.

கோப்புப்படம்

இந்தியாவில் கல்வியை எல்லாத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றதில் கிறிஸ்துவப் பாதிரிகள் நிறுவிய நிறுவனங்களின் பங்கு மகத்தானது என்று அறிவோம். 1542இலேயே கோவாவில் ஏசு சபை பாதிரியார்கள் செயிண்ட் பால் கல்லூரியை அமைத்து ஐரோப்பியக் கல்வியை இங்கு அறிமுகப்படுத்தினர். பல்வேறு கிறிஸ்துவ நிறுவனங்கள் இங்கு வெறுமனே கல்வியை மட்டும் போதிக்காமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்தனர், இன்றும் இந்தியாவில் தரமான கல்வியை வழங்கி வரும் முக்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் கிறித்துவ சமய பரப்பாளர்களின் வேர்வையில் உருவானவையே.

இந்தியாவின் முதல் உயர்கல்வி நிறுவனம் 1781இல் நிறுவப்பட்ட கல்கத்தா மதராஸா. இது அரபி, பாரசீகம் மற்றும் இஸ்லாமியச் சட்டங்களை போதிக்கும் நோக்கில் பிரித்தானிய காலனிய நிர்வாகிகளால் உருவாக்கப்பட்டது. மூன்று வருடங்கள் கழித்து ஏஸியாட்டிக் சொசைட்டி ஆப் பெங்கால் எனும் இந்தியவியல் ஆய்வு நிறுவனம் இதே பிரித்தானியர்களால் நிறுவப்பட்டது. இது பெயரளவுக்குத்தான் இந்தியவியல் ஆய்வைச் செய்வது. வில்லியம் ஜான்ஸின் தலைமையில் அவர்கள் செய்ய விழைந்தது சமஸ்கிருதமய இந்துமத வரலாற்றை உருவாக்குவதும், இந்தியாவை வைணவ தேசமாகச் சித்தரிப்பதுமே. ஏழு வருடங்களுக்குப் பிறகு பனாரஸ் சமஸ்கிருதக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. 1800 போர்ட் வில்லியம் கல்லூரி நிறுவப்பட்டது. இதன் நோக்கமும் ஏஸியாட்டிக் சொசைட்டியுடையதுதான். அதாவது பிராமணிய இந்துமதத்தைப் பற்றி ஆய்வு செய்து இந்தியாவை மறுவரையறை செய்வது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நவீன உயர்கல்வி நிறுவனங்கள் தோன்றத் தொடங்கின. ஆனாலும் அவை தனியார் அறக்கட்டளைகளால் மதவாத அடையாளத்தின் கீழே இயங்கின. 1875இல் முகமதன் ஆங்கிலோ ஓரியண்டல் காலேஜ் அமைக்கப்பட்டது. இது 1920இல் அலிகர் இஸ்லாமியப் பல்கலைக்கழகமானது. இந்து மகாசபையை தோற்றுவித்தவரும் காங்கிரஸின் வலுவான தலைவர்களில் ஒருவருமான மதன் மோகன் மாளவியாவின் முயற்சியின் விளைவாக 1916இல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டது. பிறகு மத அடையாளமற்ற பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னரே ஏகப்பட்ட அரசு கல்வி நிறுவனங்கள் தோன்றி மதச்சார்பற்ற கல்வி வழங்கப்பட்டது. ஆனால் அவை உண்மையில் நமது உயர்கல்வித் தேவைக்கு போதுமானதாக இல்லை என்பதால் (கிறிஸ்துவ) மத அறக்கட்டளைகளால் நடத்தப்படும் தனியார் நிறுவனங்களே அந்த வெற்றிடத்தை நிரப்பிவருகின்றன. இந்துத்துவ சார்புகொண்ட பள்ளிகளிலும் மதக்கல்வியை நோக்கமாகக் கொண்ட மதராஸாக்களையும் உள்ளடக்கிய ஒரு சில நிறுவனங்களைத் தவிர்த்து நமது பெரும்பாலான சமய அறக்கட்டளைகளால் நடத்தப்படும் நிறுவனங்களில் மதச்சார்பற்ற கல்வியே வழங்கப்படுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் உள்ளதை விட இங்கு கல்வி அதிக மதச்சார்பற்றதாகவே உள்ளது.

பௌத்த, சமண, ஏசு சபையினர், முகலாய நிறுவனங்களில் துவங்கிப் பின்னர் அறக்கட்டளைகளால் நிர்வகிப்பட்ட நிறுவனங்களின் பல நூற்றாண்டுகள் நீண்ட பணியைப் பார்க்கையில் நமது அரசியலைவிடக் கல்வி வரலாறே பெரும்பாலும் மதச்சார்பற்றது எனப் புரிந்துகொள்ளலாம். ஆம், இங்கு மதப் பரப்புரை நுட்பமான வகையில் நடப்பதுண்டு. அல்லது மாணவர்கள் இம்மதங்களால் ஈர்க்கப்படுவதும் இயல்பே. ஆனால் இந்நிறுவனங்களில் படித்து வரும் கணிசமான இந்து மாணவர்கள் தம் மதத்திலிருந்து வெளியேறுவதில்லை. இதுவே நமது வரலாறு. இதை அறியாத விஷமிகளே சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீது மதமாற்றக் குற்றச்சாட்டை எந்த ஆதாரமும் இன்றி வைக்கிறார்கள்.

ஹிஜாப் பிரச்சினையின் உண்மை முகம்

ஆக, இந்தியக் கல்வியிலிருந்தும் மதத்தை பிரிப்பது சுலபமல்ல. அரசியலில், கல்வி நிர்வாகத்தில், பொதுவெளியில் மதம் இந்த அளவுக்கு வலுவான தாக்கத்தைச் செலுத்துகையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதை நாம் ஏன் விமர்சிக்க வேண்டும்? இந்தியாவில் முப்பது கோடிக்கும் மேல் இஸ்லாமியர் உள்ளதாகச் சொல்கிறார்கள். பெரும்பான்மையினரான இந்துக்கள் மதச்சார்பாளர்களாக இருக்கையில், மதச்சார்பற்றவர்கள் எனத் தங்களைக் கோரிக்கொள்ளும் காங்கிரஸாரே இந்துமதச் சார்பாளர்களாக இருக்கையில், இந்திய நாடாளுமன்றமே இந்துமதச் சார்பாளர்களால், இந்துப் பிரதிநிதிகளால் நிறைந்திருக்கையில், ஒவ்வொரு தெருமுனையில் பௌத்தக் கடவுளான பிள்ளையார் ‘மதமாற்றம்’ செய்யப்பட்டு சிறுகோயிலில் வீற்றிக்கையில், அவரைக் கடந்து போவோர் தவறாக மனதுக்குள் இந்துக்கடவுள் என வணங்குகையில், இஸ்லாமியர் மட்டும் (தனியார் பள்ளியிலோ அரசு பள்ளியிலோ) மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

இஸ்லாமியரை ஹிஜாப், தொப்பி அணிந்து வராதே என நாம் கோருவதன் பிரச்சினை இந்நாடு எல்லாவிதங்களிலும் ஒரு இந்து ஆதிக்க தேசம் என்பதே. இங்கு மதச்சார்பின்மை உள்ளதான பாசாங்கின் அடிப்படையிலே நாம் இஸ்லாமியர் தம் மதச்சின்னங்களை, நம்பிக்கைகளைப் பொதுவெளியில் காட்டிடக் கூடாது எனக் கோருகிறோம் (நாளை இதை கிறிஸ்துவர்களை நோக்கியும் சொல்லுவோம்.) முதலில் நாம் இந்தப் பாசாங்கை கைவிடுவோம்.

நிஜமாகவே மதச்சார்பின்மையை நாம் விரும்பி ஏற்றால், அனைத்து மதங்களையும் ஒழிக்க வேண்டும். இந்துத்துவம் போன்ற மதவாதச் சித்தாந்தங்களை தடை செய்வோம். மதம் காலியானாலே மதச்சார்பின்மை சாத்தியமாகும். அப்படியான ஒரு மதச்சார்பற்ற நாடாக இந்தியா மாறும்பட்சத்தில் இங்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தால் அது தவறு என நான் தயங்காமல் சொல்வேன். அதுவரை இந்தப் பாசாங்கான அரசியலை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். அதுவரை அனைத்து மதத்தினரும் இங்கு பொதுவிடங்களிலும் வெளிப்படையாகவே தம் மதத்தைப் பின்பற்றும் உரிமை கொடுக்கப்பட வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.