ஓ.பி.எஸ் தொகுதியில் கோட்டைவிட்ட அ.தி.மு.க: கமுதியில் 15 வார்டுகளில் ‘எஸ்’ ஆன தி.மு.க அணி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் சில வார்டுகளில் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால், அதிமுக, திமுக 2 கட்சிகளுமே அதிர்ச்சி அடைந்தன.

அதிலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான போடி நாயக்கனூர் தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் 7வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாகஜோதி வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் ஓ.பி.எஸ் தொகுதியில் ஒரு வார்டை அதிமுக கோட்டை விட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதி தேனி மாவட்டத்தில் உள்ள போடி நாயக்கனூர். இந்த தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் 7வது வார்டில் அதிமுக சார்பில் நாகஜோதி என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அதே வார்டில், திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி பத்தனம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளில் அதிமுக வேட்பாளர் நாகஜோதி தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால், குச்சனூர் பேரூராட்சியில் 7வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானார். இப்படி, ஓ.பி.எஸ்.சின் தொகுதியில் ஒரு வார்டை அதிமுக கோட்டை விட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல, ராமநாதபுரம் மாவட்டத்தில், உள்ள கமுதி பேரூராட்சியில் திமுக ஒரு வேட்பாளர்களைக்கூட நிறுத்தாமல் எஸ்கேப் ஆகியிருப்பது ஆளும் கட்சி திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் திமுக மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான காதர் பாஷாவின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில், கமுதி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுகவும் அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இதனால், கமுதியில் 10 சுயேச்சை வேட்பாளர்களும் 1 பாஜக வேட்பாளரும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டனர். கமுதி 14வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் சத்ய ஜோதி ராஜா போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டார். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கமுதி பேரூராட்சியில், பிப்ரவரி 19ம் தேதி 2, 3, 6, 9 ஆகிய வார்டுகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கமுதி பேருராட்சியில், ஆளும் கட்சி திமுக சார்பில் ஒரு வார்டில் கூட வேட்பாளர்களை நிறுத்தாதது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல, ராமநாதபுரம் நகராட்சியில், 29வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மீனாட்சி, சுயேச்சை வேட்பாளர் ஆனந்தி ஆகியோர் தங்கள் வேட்புமனுவை திடீரென வாபஸ் பெற்றதால், திமுக வேட்பாளர் காயத்திரி கார்மேகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக, வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற அன்று அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நிராகரித்ததால், திமுக வேட்பாளர் பிரவீன் தங்கம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தொகுதிக்குட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில், அதிமுக வேட்பாள வாபஸ் பெற்றதால் அதிமுக கோட்டை விட்டுள்ளது. இது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் திமுக வேட்பாளர்களை நிறுத்தாமல் ‘எஸ்’ ஆகியிருப்பது திமுகவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.