'மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்!' – முதல்வர் திடீர் பேட்டி!

பஞ்சாப் மற்றும் நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகளில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர்
சரண்ஜித் சிங் சன்னி
தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் கட்சி படுதீவிரமாக செயலாற்றி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதுக்கட்சி தொடங்கிய கேப்டன் அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தும் நோக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின்
ஆம் ஆத்மி
கட்சியும் இந்தத் தேர்தலில் களம் காண்கிறது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பக்வந்த் மன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், டெல்லி முதலமைச்சர்
அரவிந்த் கெஜ்ரிவால்
செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என அனைத்துக் கட்சிகளும் இணைந்துள்ளனர். நேர்மையான ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும். ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், தங்கள் கொள்ளை நிரந்தரமாக முடிந்து விடும் என்ற அச்சத்தில் உள்ளனர். தேசிய பாதுகாப்பில் ஆம் ஆத்மி ஒருபோதும் சமரசம் செய்யாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் மற்றும் நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகளில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்திருக்கக் கூடாது. ஆனால், இரு தரப்பினரும் அரசியல் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.