புதிதாக அறிவிக்கப்பட்ட ராயசோட்டியை ரத்து செய்து மதனப்பள்ளியை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது

சித்தூர் : புதிதாக அறிவிக்கப்பட்ட ராயசோட்டி மாவட்டத்தை ரத்து செய்து மதனப்பள்ளியை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் எதிர்க்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து மதனப்பள்ளியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஷாஜகான் பாஷா பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் மாநிலத்தில் ஒவ்வொரு எம்பி தொகுதியையும் மாவட்டமாக அறிவிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஆந்திர மாநிலத்தில் 25 எம்பி தொகுதிகள் உள்ளன. அந்த தொகுதிகளை 25 மாவட்டங்களாக அமைத்துள்ளார். சித்தூர் மாவட்டத்தில் 3 எம்பி தொகுதிகள் உள்ளன. அதில், ராஜம்பேட்டை எம்பி தொகுதியை ஒரு மாவட்டமாக அறிவித்து அந்த மாவட்டத்துக்கு தலைநகர் ராயசோட்டி பகுதியாக அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மதனப்பள்ளியில் இந்திய தேசிய கீதம் இயற்றப்பட்டது. 110 ஆண்டுகள் பழமையான அரசு கல்லூரி உள்ளது. இந்த அரசு கல்லூரியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் படித்து வந்தார்கள். அந்த காலத்தில் பட்டப்படிப்பு படிக்க வேண்டுமென்றால் சென்னை அல்லது ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று படிக்க வேண்டும்.அதேபோல் அரசுக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் மாவட்ட இணை கலெக்டர் அலுவலகம் உள்ளது. பட்டு உற்பத்தியில் மதனப்பள்ளி முதலிடம் பிடித்துள்ளது. தக்காளி ஏற்றுமதி செய்வதில் மதனப்பள்ளி முதலிடம். மருத்துவமனைகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மதனப்பள்ளியில் உள்ளது. ஆனால் முதல்வர் ஜெகன்மோகன் மதனப் பள்ளியை மாவட்டமாக அறிவிக்காமல் ராயசோட்டியை மாவட்டமாக அறிவித்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அந்த ராயசொட்டி பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென்றால் 150 கிமீ தூரத்திற்கு மூன்று பேருந்துகள் மாறிமாறி ஏறி செல்லும் அவல நிலை ஏற்பட்டுவிடும். ஆகவே ராயசோட்டி பகுதியை மாவட்டமாக அறிவித்ததை ரத்து செய்து மதனப்பள்ளியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் இந்த மாதம் 28ம் தேதி மதனப்பள்ளி, புங்கனூர், செளடே பள்ளி, தம்பல பள்ளி, பீலேர், பிடிஎம்,  சிடிஎம், பி கொத்த கோட்டா உள்ளிட்ட பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். எனவே, மாநில முதல்வர் உடனடியாக ராயசோட்டி மாவட்ட அறிவிப்பை ரத்து செய்து மதனப்பள்ளியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் அனைத்துக் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில், தெலுங்கு தேசம், காங்கிரஸ், ஜன சேனா, பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.