ஹிஜாப் தடை ஏன் தெரியுமா?.. சித்தராமையா போடும் புதிய குண்டு!

முஸ்லீம் பெண்கள் கல்வி அறிவு பெறக் கூடாது. அவர்கள் படிக்கக் கூடாது. இந்த நோக்கத்தில்தான் ஹிஜாப் அணிய தடை விதித்திருக்கிறது
பாஜக
என்று கர்நாடக மாநில முன்னாள் முதலவரும், எதிர்க்கட்சித் தலைவருமான
சித்தராமையா
கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் சில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது பெரும் பிரச்சினையானது. இதுதொடர்பாக போராட்டங்களும் வெடித்தன. இதுதொடர்பான ஒரு வழக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தற்போது கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை தொடர்ந்து நீடிக்கிறது. மாணவிகள் மட்டுமல்லாமல் ஆசிரியைகளும் கூட ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து சாந்தினி என்ற கல்லூரி விரிவுரையாளர் தனது வேலையை விட்டு விட்டார்.

இந்த நிலையில்
ஹிஜாப் தடை
தொடர்பாக சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீருடை நடைமுறை தொடர்பான உத்தரவுகளை முதலிலேயே தெளிவாக பிறப்பித்திருக்க வேண்டும். சட்டசபைக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே இதை கொண்டு வந்திருக்க வேண்டும். ஜனவரி -பிப்ரவரி மாதத்தில் இதை நடைமுறைப்படுத்துவதில் உள்நோக்கம் இருக்கிறது. வேண்டும் என்றே இதைச் செய்துள்ளனர். முஸ்லீம் பெண்கள் கல்வி அறிவு பெறக் கூடாது, மேல் கல்விக்குப் போகக் கூடாது, படிக்கக் கூடாது. இந்த நோக்கத்தில்தான் இந்தத் தடையை கொண்டு வந்துள்ளனர். இது பாஜகவின் திட்டமிட்ட சதி.

ஆர்எஸ்எஸ் அறிவுறுத்தலின்பேரில்தான் இந்த மோசமான நடவடிக்கையை பாஜக எடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் அறிவுறுத்தலின் பேரில்தான் ரகுபதி பட் தலைமையிலான சீருடை விதிக் குழு அமைக்கப்பட்டு அது சீருடை குறித்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஒருவர் ஹிஜாபோ அல்லது டர்பனோ அணிந்தால் மற்றவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படும். ஒருவர் சிலுவை அணிந்து வந்தால் மற்றவர்களுக்கு அதனால் என்ன தீங்கு வந்து விடப் போகிறது.

அரசு இந்தப் பிரச்சினையை எளிதாக தீர்த்திருக்க முடியும். இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது புதிதல்ல. காலம் காலமாக இதைச் செய்து வருகிறார்கள். இதனால் அமைதி எதுவும் கெட்டுப் போனதாக வரலாறு இல்லை. மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அரசு கூறுவதெல்லாம் வெறும் நாடகம் என்று கூறியுள்ளார் சித்தராமையா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.