ஒரு கைப்பிடி வெந்தயம்… இவ்ளோ மேஜிக் இருக்கு!

Skin care, Digestion and other Health benefits of Fenugreek in Tamil: நமது சமையல் அறைகளில் கிடைக்க கூடிய சில எளிய பொருட்கள் சிறந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. நாம் அவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்து, உட்கொண்டு வந்தாலும், அவற்றை தனியாக எடுத்துக் கொள்ளும்போதோ அல்லது அந்த பொருட்களை பிரதானமாக கொண்டு செய்யப்படும் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அவற்றின் முழுப்பயனும் நமக்கு கிடைப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளும் தீர்கிறது.

அப்படியான சமையலறை உணவுப் பொருட்களில் ஒன்று வெந்தயம். இது விலை மலிவாக கிடைக்கும் அதேநேரத்தில், மிகச்சிறந்த மூலிகை பொருளாகவும் உள்ளது. வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது, மேலும் அதிலுள்ள சத்துக்கள் நம் முகத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி கிளன்சிங் செய்யவும் பயன்படும். ஆரோக்கியம், அழகு வரை உதவும் வெந்தயத்தின் முக்கிய நன்மைகளை இப்போது பார்ப்போம்.

உஷ்ணத்தை தணிக்கிறது

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும், உடல் உஷ்ணம் காணாமல் போய்விடும். உடல் உஷ்ணம் அதாவது உடல் சூடு காரணமாக நாம் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக கூடும். உஷ்ணம் தணிய ஒரு கைப்பிடி வெந்தயத்தை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் வெந்தயத்தையும் சேர்த்து பருகினால் வயிறு குளிர்ந்து உடல் முழுவதும் இருக்கும் உஷ்ணம் தீர்ந்து விடும். மேலும், இது முடி உதிர்வு பிரச்சனையையும், வயிறு தொடர்பான அத்தனை பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.

தலைமுடி ஆரோக்கியம்

வெந்தயம் தலை முடியின் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க உதவுகிறது. கொஞ்சம் வெந்தயத்தை ஊற வைத்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதை தலை முழுவதும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் தலையை அலசினால், தலைமுடி ஆரோக்கியம் மேம்படும். மேலும், தலைமுடி நல்ல நறுமணத்துடன், சிக்குகள் இன்றி அலைபாயத் தொடங்கும்.

சரும பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது

கோடைக்காலம் வந்து விட்டாலே எல்லோரும், சருமம் வறண்டு போவதை தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். இதற்கு எளிமையாக, ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் தடவிக் கொள்ள வேண்டும். பின் குளிர்ந்த நீரினால் அலசினால் வெயிலினால் வரக்கூடிய சரும பாதிப்புகள் அத்தனையும் நீங்கும். கருமையான நிறம் மறைந்து, நல்ல பொலிவு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: வீட்டுல பப்பாளி மரம் இருக்கா? சுகர் பிரச்னைக்கு இதை ட்ரை பண்ணுங்க!

வெந்தயத்தை ஊற வைக்காமல் அப்படியே பவுடராக அரைத்து அதனுடன், பால் சேர்த்து 15 நிமிடம் முகம் முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் துளைகள் விரிந்து அதிலிருக்கும் அடைப்புகள் அனைத்தும் நீங்கி, முகம் அழுக்குகள் இன்றி பளிச்சென மின்னும். சிலருக்கு மூக்கு ஓரங்களில் எல்லாம் கருமை படர்ந்து இருக்கும். அது போல இருப்பவர்கள் இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி பாருங்கள், நாளடைவில் பொலிவு கிடைக்கும்.

முகப்பருக்கள் நீங்கும்

வெந்தய பொடியுடன் பாலுக்கு பதிலாக தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை முகம் முழுவதும் அடர்த்தியாக தடவி நன்கு ஈரப்பதம் இல்லாமல் உலரவிட்டு, குளிர்ந்த நீரினால் அலம்பினால் கருப்பாக இருப்பவர்கள் கூட நல்ல நிறம் கிடைத்து வெள்ளையாக தெரிவார்கள். வெந்தய பொடியுடன் தேன் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்து வர முகப் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். புதிதாக பருக்களும் முளைக்காது.

வயிறு பிரச்சனைகளை தீர்க்கிறது

தினமும் வெந்தயத்தை ஒரு டீஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடித்து விடுங்கள். இதனால் வயிற்றிலிருக்கும் உஷ்ணம் நீங்கி செரிமான கோளாறுகள், வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் பாதுகாக்கலாம்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது, வெந்தயம் அதிக குளிர்ச்சி என்பதால் சிலருக்கு சுவாச பிரச்சனைகள் வரலாம். எனவே சுவாச பிரச்சனைகள் இருப்போர் கவனமாக எடுத்துக் கொள்வது நல்லது.

மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.