நெல்லை: மேயர் வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்! – இணையத்தில் பரவும் கலகக் குரல்கள்

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 51 இடங்களைப் பிடித்து அசுர பலத்துடன் இருக்கிறது. மேயர் வேட்பாளர் என்ற கனவுடன் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலரும் தங்கள் பெயரைக் கட்சித் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

நெல்லை மாநகராட்சியின் தி.மு.க கவுன்சிலர்கள் சிலருக்கு கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் நல்ல அறிமுகம் இருந்தது. அதனால் அவர்கள் தங்களுக்கு மேயர் பொறுப்பை பெற்றுத் தருவார்கள் என நம்பியிருந்தனர். இதற்காக சில கவுன்சிலர்கள் சென்னையில் முகாமிட்டு இருந்தார்கள்.

தி.மு.க தலைமை சார்பாக யாருமே எதிர்பார்க்காத வகையில், மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப் ஆதரவாளரான பி.எம்.சரவணன் என்பவரின் பெயரை மேயர் வேட்பாளராக அறிவித்து விட்டது. நெல்லையில் பெரும்பான்மையாக உள்ள பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த அவர் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.

மேயர் வேட்பாளர் சரவணன் மற்றும் துணை மேயர் வேட்பாளர் கே.ராஜூ

சரவணன் பெயரைக் கட்சித் தலைமை அறிவித்ததும் ஏற்கெனவே எதிர்பார்ப்பில் இருந்த பலரும் அப்செட் ஆகிவிட்டனர். மேயர் பொறுப்பு கிடைக்காவிட்டால், துணை மேயர் பொறுப்பாவது தங்களுக்கு வழங்கப்படும் என சிலர் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், அதுவும் தலைமை செயற்குழு உறுப்பினரான கே.ராஜூவுக்கு சென்று விட்டது.

நெல்லை மாநகராட்சியில் மேயர் அல்லது துணை மேயர் பொறுப்பு தேவர் சமுதாயத்துக்குக் கிடைக்கும் என சில கவுன்சிலர்கள் நம்பியிருந்தனர். ஆனால் துணை மேயர் பொறுப்பு இந்த முறை யாதவர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் தேவர் சமுதாயம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக அந்த சமூகத்தினர் கருதுகிறார்கள்.

நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப்

அதனால், சமூக வலைதளங்களில் தங்களை இந்த முறை தி.மு.க புறக்கணித்து விட்டதாகக் குமுறல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இனி மண்டலத் தலைவர் பொறுப்பாவது கிடைக்க வேண்டுமே என்கிற கவலையில் இருக்கிறார்கள், மேயர் கனவில் இருந்த சில தி.மு.க கவுன்சிலர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.