நோ ஃப்ளை ஜோன் என்றால் என்ன?- உக்ரைனின் கோரிக்கையும்; நேட்டோவின் நிராகரிப்பும்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து இன்றுடன் (மார்ச் 6) 11 நாட்கள் ஆகின்றன. உக்ரைன் தரப்பு பேரிழப்பை சந்தித்துவிட்டது. உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவும் மெல்ல மெல்ல அதன் விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவிடம் நோ ஃப்ளை ஜோன் கோரிக்கையை விடாப்பிடியாக முன்வைத்து வருகிறார். ஆனால், நேட்டோ திட்டவட்டமாக அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. அதென்ன நோ ஃப்ளை ஜோன், ஒற்றை அறிவிப்பிற்கு நேட்டோ ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறது.

நோ ஃப்ளை ஜோன் என்றால் என்ன? உக்ரைனை, நோ ஃப்ளை ஜோன் என்று அறிவிக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார். நோ ஃப்ளை ஜோன் என்று ஒரு பகுதியை அறிவித்தால் அந்த வான்வழிப் பரப்பில் போர் விமானங்கள், ட்ரோன்கள், பயணிகள் விமானம் என எதுவுமே பறக்கக் கூடாது. போர்ப்பதற்றக் காலங்களில் ஒரு பகுதி நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்கப்பட்டால் அந்த வான் எல்லைக்குள் பறக்க முற்படும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படலாம். 1991ல், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் இராக்கை நோ ஃப்ளை ஜோன் பகுதியாக அறிவித்தன.
கடந்த 2011ல் லிபியா மீது விமானங்கள் பறக்க ஐ.நா. தடை விதித்தது. ஆனால் உக்ரைனை நோ ஃப்ளை ஜோன் என்று அறிவித்தால் அமெரிக்காவும், நேட்டோ படைகளும் உக்ரைன் வான்பரப்பை பாதுகாக்க தங்களின் படைகளை அனுப்ப வேண்டும். அப்படிச் செய்தால் அது ரஷ்யாவுடன் நேரடியாக போர் தொடுக்க வழிவகை செய்யும். அதனாலேயே நேட்டோ உக்ரைனை நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்க மறுத்துள்ளது.

நேட்டோ கைவிரிப்பு: இது குறித்து நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், “எங்களுக்கும் உக்ரைன் ரஷ்யா மோதலுக்கும் சம்பந்தமில்லை. உக்ரைனில் நடைபெறும் போர் அதைத் தாண்டி பரவாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. உக்ரைனின் நிலைமையை எங்களால் உணர முடிகிறது. ஆனால், உக்ரைனை நோ ஃப்ளை ஜோனாக அறிவித்தால் நாங்கள் ரஷ்யாவுடன் நேரடியாக மோதல் நடத்த நேரிடும். இது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் போரில் ஆழ்த்தும். பெருந்துயரத்துக்கு வழிவகுக்கும். உக்ரைனுக்கு ராணுவப் படைகளை அனுப்புவதில்லை, நோ ஃப்ளை ஜோனாக அறிவிப்பதில்லை இல்லை என்பதில் நேட்டோ உறுப்பு நாடுகள் ஒற்றுமையாக இருக்கின்றன. எங்களின் இலக்கு அமைப்பில் உள்ள 30 நாடுகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதே” என்று கூறியுள்ளார்.

ரஷ்யா எச்சரிக்கை.. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறுகையில், “நோ ஃப்ளை ஜோனாக உக்ரைனை அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிடிவாதம் காட்டுவது அவர் இந்த மோதலை நீட்டிக்க விரும்புகிறார். அதுவும் நேட்டோவை இழுத்துவிட்டு நீட்டிக்க விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண அவர் விரும்பவில்லை. பேச்சுவார்த்தையில் தீர்வு காணுமாறு தொடர்ந்து வாஷிங்டன்னில் இருந்து வரும் அறிவிப்புகளை அவர் சட்டை செய்யவில்லை. பாரிஸ், பெர்லின் என உலக நாடுகளில் இருந்து வரும் அத்தனை அறிவுரைகளையும் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கிறார். ஆகையால் இந்த விஷயத்தில் நேட்டோ தலையிடப்போவதில்லை. ஜெலன்ஸ்கி நோ ஃப்ளை ஜோனைப் பெற்று ரஷ்யாவுக்கு எதிரான தனது போரை நேட்டோ மூலம் நடத்த நினைக்கிறார்” என்றார். நோ ஃப்ளை ஜோனை அறிவித்தால் நேட்டோ மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ரஷ்ய அதிபர் புதினும் எச்சரித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா திட்டவட்டம்.. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளின்கன் கூறுகையில், “ஜெலன்ஸ்கி சொல்வது போல் உக்ரைனை நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்க வேண்டுமென்றால் நாங்கள் நேட்டோ படைகளை அனுப்பி ரஷ்ய விமானங்களை வீழ்த்த வேண்டும். இது ரஷ்யாவுடன் போரிடவதற்கு சமம். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஒருபோது ரஷ்யாவுக்கு எதிராக போரிடப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள தேவையான உதவிகளை தாரளமாகச் செய்வோம் என்று கூறினார்.

நேட்டோ என்றால் என்ன? நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர்ந்து இயங்க வேண்டும். இதுவே நேட்டோவின் பின்னணி. ஆனால், ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டது நேட்டோ என்பது ரஷ்யாவின் நிலைப்பாடு. இந்தச் சூழலில் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய ஆர்வம் காட்டியது. யுக்ரேனிய அரசியலமைப்பிலேயே நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் எண்ணம் தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது. அதில் இன்றளவு அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி உறுதி காட்டி வருகிறார். ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலும், நேட்டோவும் முகத்துக்கு நேராகவே முடியாது என்று சொன்னாலும் கூட கெஞ்சியும், ஆவேசமாகப் பேசியும் உணர்வுப்பூர்வமாவது வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறார். நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்று 1990இல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறி வருகிறது அதற்கு உக்ரைன் துணை போகிறது என்பதே புதினின் நீண்ட கால குற்றச்சாட்டு.

ஜெலன்ஸ்கி வளைந்து கொடுத்து நாட்டு மக்களைக் காப்பாரா இல்லை நேட்டோ! நேட்டோ எனப் பிதற்றுவாரா என்பது தான் உலக நாடுகளின் அக்கறையாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.