புனே மெட்ரோ ரயில் தொடக்கி வைத்த பிரதமர்… ஆற்றுத் திருவிழா கொண்டாட வலியுறுத்தல் <!– புனே மெட்ரோ ரயில் தொடக்கி வைத்த பிரதமர்… ஆற்றுத் திருவ… –>

புனேயில் மெட்ரோ ரயில் போக்குவரத்துத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, ஆற்றுக்குப் புத்துயிரூட்டும் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். ஆற்றுநீரை முறையாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நகரங்களில் ஆற்றுத் திருவிழா கொண்டாட வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். 

மகாராஷ்டிரத்தின் புனே மாநகராட்சி வளாகத்தில் சத்ரபதி சிவாஜி சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பகத்சிங் கோசியாரி, புனே மேயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

புனேயில் கிழக்கு – மேற்கு, தெற்கு – வடக்கு என இரண்டு வழித்தடங்களில் 32 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாகக் கிழக்கு மேற்குத் தடத்தில் பணி முடிக்கப்பட்ட 12 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

 

பயணச்சீட்டு வாங்கி, கார்வார் கல்லூரி முதல் ஆனந்த் நகர் வரை மெட்ரோ ரயிலில் சென்ற பிரதமர் மோடி, அதே ரயிலில் பயணித்த மாணவர்கள் மற்றும் பயணியரிடம் கலந்துரையாடினார்.

 

பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் அஜித் பவார் நினைவுப் பரிசு வழங்கினார்.

 

புனேயில் பாயும் மூலா, முத்தா ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து ஆறுகளுக்குப் புத்துயிரூட்டும் இரண்டாயிரத்து 550 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் உட்படப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

 

மின்சாரத்தால் இயங்கும் 140 பேருந்துகளைத் தொடக்கி வைத்ததுடன், அவற்றுக்கான பணிமனையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

 

விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு நகரிலும் மின்சார வாகனங்கள் மூலம் மாசில்லாப் போக்குவரத்து வசதியை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் அகற்றும் பணிக்கு ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். நகரங்களில் ஆற்றுத் திருவிழா கொண்டாடும்படி வலியுறுத்திய பிரதமர், இது ஆற்றுநீரை முறையாகப் பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் எனத் தெரிவித்தார். கல்வி, தகவல் தொழில்நுட்பம், வாகனத் தொழில் மையமாகப் புனே உருவாகியுள்ளதாகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தால் காற்றுமாசு பெருமளவில் குறையும் எனத் தெரிவித்தார். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.