மன்னிக்க மாட்டோம், மறக்கவும் மாட்டோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன் ஆயுதங்களை கீழே போடும்வரை போரை நிறுத்த மாட்டோம் என ரஷிய அதிபர் புதின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு மேற்கு நாடுகளின் உதவிகள் போதுமானதாக இல்லை. தனி ஒரு நாடாக இன்று சமாளிக்க வேண்டியுள்ளது.
இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்தால் கீவ் நகரை முழுமையாக ரஷியப் படைகள் பிடிக்க வாய்ப்புள்ளது. தற்போது முக்கிய நகரங்கள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது.
இந்த போர் காரணமாக  உக்ரைனில் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதியாக அணைடை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 2-ம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகமாக அகதிகள் எண்ணிக்கை அதிரித்து வருவதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
உக்ரைன் வான்வெளியை ரஷியா பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என நேட்டோ நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவி கேட்டார். ஆனால், நேட்டோ நாடுகள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டன.
ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், எங்கள் நாட்டை அழிக்கும் நோக்கமுடையவர்களை மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில் ‘‘இது கொலை. திட்டமிட்ட கொலை. நாங்கள் மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம். இந்த போரில் எங்கள் நாட்டில் அட்டூழியம் செய்த அனைவரையும் தண்டிப்போம். கல்லறையை தவிர இந்த உலகத்தில் அமைதியான இடம் ஏதும் இல்லை’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.