திண்டிவனத்தில் திமிங்கிலக் கழிவுகளைக் கடத்த முயன்ற 4 பேர் கைது

விழுப்புரம்: திண்டிவனத்தில் திமிங்கிலக் கழிவுகளைக் கடத்தியதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டிவனம் நகரில் முருங்கப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் திமிங்கலத்தின் கழிவுகளை பதுக்கி வைத்திருப்பதாக திண்டிவனம் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோகனரங்கன்( 62) என்பவரின் வீட்டில் திமிங்கலத்தின் கழிவுப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

அப்போது, மோகனரங்கன் வீட்டுக்கு 2 பைக்கில் வந்த 4 பேர் 2 பைகளை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர். உடனே போலீஸார் அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் அம்பர் கிரிசுகள் எனப்படும் 14 கிலோ 750 கிராம் எடையுள்ள திமிங்கலத்தின் கழிவுகள் இருந்ததை கண்டனர். இது வாசனை திரவியங்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படும். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மோகனரங்கன் உள்பட 5 பேரையும் போலீஸார் பிடித்து ரோஷணை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் சந்திரசேகர் (33), உத்ராபதி மகன் லட்சுமிபதி (33), பொளம்பாக்கத்தை அடுத்த மலுவை கரணை பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் முருகன் (32), திண்டிவனத்தை அடுத்த ஆலகிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மகன் சத்தியமூர்த்தி (34) என்பதும், மோகனரங்கன் வீட்டில் இருந்து திமிங்கலத்தின் கழிவுப் பொருட்களை கடத்திச் செல்ல முயன்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது.

திமிங்கில கழிவுப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 4 பேருடன் வனத்துறையினர்

அப்போது மோகனரங்கன் தப்பிச் செல்வதற்காக திடீரென மாடியில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் கழிவுப் பொருட்களையும் வனத்துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இதையடுத்து 4 பேர் மீது வனத்துறையினர் இன்று வன உயிரின பாதுகாப்பு சட்டப்பிரிவு 2 (32), 39 (A), (D), 39 (3A), (3B), (3C), 40 (1), (2), (2A), (2B), 49 A, B,,C ,50,51, 51 (1) 57 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.