உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் திரும்பினர் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்துக்கு நேற்று உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார் என்று அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெய்சங்கர்

அரசின் மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரை மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்தார். அதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடந்த மாதம் 24-ம் தேதியே கடிதம் எழுதினார்.

இதையடுத்து மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்க உத்தரவிட்டார். பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்ட துடன், சென்னையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டது. கடந்த 26-ம் தேதி கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற முதல்வர் காணொலி மூலம் உக்ரைனில் மருத்துவம் பயிலும் 3 மாணவர்களுடன் உரையாடி தைரியத்தையும், அறி வுரையையும் வழங்கினார்.

மேலும், 1921 நபர்கள், 3501 தொலைபேசி அழைப்புகள் மூலமும், 4426 மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு உக்ரைன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பெற்றோர், உறவினர் மூலமாக அவர்கள் விவரம் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத் துறையிடம் பகிரப்பட்டது. மீட்பு நடவடிக்கை தாமதமான காரணத்தால் மீண்டும் வெளியுறவுத் துறை அமைச்சரை முதல்வர் தொலைபேசி மற்றும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ., ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

35 மாணவர்கள் உக்ரைன் நாட்டின் சில பகுதிகளில் இருந்து அருகில் உள்ள ஹங்கேரி நாட்டுக்கு பயணம் செய்த செலவு மற்றும் சுமார் 160 மாணவர்களுக்கு உக்ரைன், ருமேனியா நாட்டின் எல்லைக்கு செல்வதற்கும் அங்கிருந்து ருமேனியா நாட்டின் தலைநகரான புகாரெஸ்டிக்கு செல்வதற்குமான செலவையும் தமிழக அரசே ஏற்றது.

உக்ரைனில் படித்த 1,921 மாணவர்களில் இதுவரை 1,890 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 1,524 மாணவர்கள் தமிழக அரசு செலவிலும், தமிழகம் அழைத்து வரப்பட்டு, அவர்கள் இல்லம் செல்லும் வரை கொண்டு சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 366 பேர் அவர்களது சொந்த செலவில் தமிழகம் திரும்பியுள்ளனர். இதுதவிர 31 மாணவர்கள் உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் பாதுகாப்பான பகுதிகளில் குடியேறிவிட்டனர். இவர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

சென்னை விமான நிலையத்துக்கு நேற்று உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசி குழுவினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.