நீதிமன்றங்களை அதிகம் திறப்பது பெருமை இல்லை: உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் 

கொடைக்கானல்: நீதிமன்றங்களை அதிகம் திறப்பது பெருமை இல்லை. குற்றங்களை குறைத்து நீதிமன்றங்களை இழுத்துமூடுவது தான் பெருமை. ஏனென்றால் நீதிமன்றங்கள் குறைவதால் ஊரில் சண்டையும் இல்லை, குற்றங்களும் இல்லை என்று பொருள், என உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் பேசினார்.

கொடைக்கானலில் நீதித்துறை நடுவர் கூடுதல் நீதிமன்றம்-2 (ஜேஎம் 2) திறப்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் நீதிமன்றத்தை திறந்துவைத்து பேசியது: “நீதியை விரைவில் கொடுக்கவேண்டும் என்ற காலகட்டம் தற்போது உள்ளது. தேவையில்லாமல் வாய்தா வாங்கக்கூடாது. காந்தி, நேரு, அம்பேத்கர், பட்டேல் ஆகியோர் பணியாற்றிய துறை இது. எத்தனை பெருமையான துறை இது, கடந்த 60 ஆண்டு காலத்தில் தாழ்ந்துகிடக்கிறது.

அநீதிக்கு எதிராக முன்னின்று போராடுவது வழக்கறிஞர்கள் தான். கூடுமானவரை சிவில் வழங்குகளை செட்டில்மென்ட் மூலம் தீர்க்கவேண்டும். நீதித்துறையில், சாதாரண நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள்தான் அதிகம். நீதிமன்றங்கள் அதிகம் திறந்தால் நகருக்கு பெருமை இல்லை. நீதிமன்றங்களை இழுத்துமூடுவது தான் பெருமை. அந்த ஊரில் சண்டையும் கிடையாது. குற்றங்களும் இல்லை என்று பொருள். கடந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி நீதித்துறைக்கு எப்பொழுதும் கூடுதல் நிதி கொடுக்க தயாராக இருப்பது மிகவும் மகிழ்ச்சியானது” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் முன்னிலை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.நிர்மல்குமார், ஆர்.என்.மஞ்சுளா, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். திண்டுக்கல் டிஐஜி ரூபேஸ்குமார்மீனா, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நீதிபதி மோகனா நன்றி கூறினார்.

:::::

.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.