BB Ultimate 45: "அடிக்கற வேலைலாம் வெச்சுக்காத; அறைஞ்சிடுவேன்"-பாலாவை திணறவைத்த நிரூப்; என்ன நடந்தது?

நேற்றைய எபிசோடில், ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசினார்கள்; பேசினார்கள்; அப்படிப் பேசினார்கள். கதை வசனம் முழுக்க புரியாமல் நாம்தான் மண்டை காய வேண்டியிருந்தது. நல்லவேளையாக, ‘கோழி’ டாஸ்க்கில், மக்கள் சண்டைக்கோழிகளாக மாறியதில், சற்று ஆக்ஷன் காட்சிகளைப் பார்க்க முடிந்ததால் நாம் தப்பித்தோம்.

எபிசோட்- 45-ல் நடந்தது என்ன?

‘கிளிமாஞ்சாரோ’ என்கிற ரகளையான பாடல் காலையில் ஒலிக்க, இதற்குகூட எழுந்திருக்காமல் தூக்கக் கலக்கத்துடன் அப்படியே அமர்ந்திருந்தார் சதீஷ். (தம்பி. உன் மனசுல என்னதான் நெனச்சுட்டு இருக்கே?!). குளத்து நீரில் விழுந்திருக்கும் ஆமைகள் போல, வட்டப்படுக்கையில் S போன்ற சிக்கலான வடிவத்தில் சுருண்டு படுத்திருந்த தாமரையும் சுருதியும் காலையிலேயே உற்சாகமாக புறணி பேச ஆரம்பித்தார்கள். “இந்த ரம்யாவுக்கு சில விஷயங்கள்ல நிரூப்பைப் பிடிக்காது. ஆனா நேத்து அவனை ரம்யா நாமினேட் பண்ணலை. கவனிச்சியாக்கா?” என்று சுருதி ஆரம்பித்து வைக்க “நான் சொல்றதை கேளு.. பக்கி” என்று எனர்ஜி குறையாமல் வம்பு பேசிக் கொண்டிருந்தார் தாமரை.

சுருதி

தத்துவ உபதேசம் செய்த வானொலிப் பெட்டி

இன்னொரு பக்கம் ரம்யாவிடம் பேசிக் கொண்டிருந்தார் சதீஷ். ரம்யாவிற்கு மட்டுமே கேட்கும் அலைவரிசையாக இந்த வானொலிப் பெட்டி இயங்கிக் கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் இதில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல்.. இளையராஜா குரலில் ‘நான்.. யாரு.. எனக்கேதும் தெரியலையே..’. ஆம். அந்தளவிற்கு ரம்யாவிடம் தத்துவமாக அனத்திக் கொண்டிருந்தார் சதீஷ். “இந்த வீட்ல நிறைய பேர் பின்னாடிதான் பேசறாங்க.. அப்புறம் கேட்டா “நான் அந்த அர்த்தத்துல சொல்லலை’ன்னு சொல்லிடறாங்க.. நாமளும் வேறவழியில்லாம சிம்பாலிக்கா பேச வேண்டியிருக்கு. இதில ஜெயிச்சா.. என்ன.. ஒரு 50 லட்சம் கிடைக்குமா? அதுக்குப் போயா இப்படியெல்லாம் பண்ணுவாங்க..?” என்று பிக் பாஸ் டைட்டிலை மெரீனா பீச் சுண்டல் ரேஞ்சிற்கு சதீஷ் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு பிக் பாஸ் நிச்சயம் நொந்து போயிருப்பார். கடைசியில் ‘வாழும் வள்ளலாராக’ சதீஷ் சொன்ன ஒரு தத்துவத்தைக் கேட்டு நமக்குத்தான் புல்லரித்தது. “எனக்குப் பதிலா வேற யாராவது இங்க வந்திருந்தா நிறைய கஷ்டப்பட்டிருப்பாங்க.. அதுக்குப் பதில் நான் கஷ்டப்படறது ஒருவகையில் எனக்கு சந்தோஷம்தான்”.

தாமரை

சதீஷ் அடிப்படையில் யாரையும் காயப்படுத்த நினைக்காத, புறணி பேச விரும்பாத நல்ல மனிதராக இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் வீடு என்பது ஏதோ அயல்கிரகம் அல்ல. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தின் அதே சிறிய நிழல்தான். நல்ல மனிதர்களும் நுண்ணுணர்வு கொண்டவர்களும் இதே சமூகத்தில்தான் வாழ வேண்டியிருக்கிறது. தன்னுடைய நல்லியல்புகளைக் கலைத்துக் கொள்ளாமல் தானும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயல்வதுதான் அவர்களின் கடமை. சமூகத்தின் கீழ்மைகளைக் கண்டு மனம் சோர்ந்தால் அந்த மனச்சோர்வு மட்டுமே கடைசியில் மிஞ்சுமே தவிர, அதனால் உபயோகம் ஏதுமில்லை. தன்னிடம் உள்ள பிரத்யேகமான நகைச்சுவைத் திறனின் மூலம் சக போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவதுதான் சதிஷீன் கடமை. அதைச் செய்யாமல் ‘உலகம் .. ஏன் இப்படி இருக்குது?” என்று பொழுது பூராவும் புலம்புவது நேர விரயம்.

ரம்யா பாண்டியன், சதீஷ்

ரேடியோவை ஆன் செய்த தாமரை “காலைல இருந்து நடந்ததைச் சொல்லு” என்று சதீஷைக் கேட்க, தனது காமெடி சென்ஸை சதீஷ் வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. ஆனால் அவரோ “என்ன பேசணும்னு ரேடியோதான் முடிவு செய்யும். அதையெல்லாம் நீங்க சொல்லக்கூடாது” என்று தாமரையை லாஜிக்காக மடக்கினார். (இதெல்லாம் நல்லா பேசறீங்க தம்பி!). ‘பெண்கள் நாட்டின் கண்கள். எங்க அம்மாவைத் தவிர பெண்கள் கிட்ட பழகற வாய்ப்பு எனக்கு இல்லை. இங்க இருக்கற பெண்கள் எல்லாம் என் கிட்ட அருமையா நடந்துக்கறாங்க” என்று சதீஷ் ‘சிம்பாலிக்காக’ பேச, “நல்ல ரேடியோ இது. எனக்குப் பிடிச்சிருக்கு” என்று பாராட்டினார் சுருதி.

“என்னதாம்ப்பா பேசிக்கறீங்க. ஒண்ணும் புரியலை”

அடுத்ததாக ஒரு நீண்ட, தொடர்ச்சியான உரையாடல் நடந்தது. இவர்கள் பேசிக் கொண்டதை வைத்து ஒரு ‘குன்சாக’த்தான் விஷயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதாவது, ‘பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியமாக்க என்னவெல்லாம் செய்யணும்?.. எதையெல்லாம் போட்டியாளர்கள் மிஸ் பண்றீங்க?’ என்று ஒரு தலைப்பில் பட்டிமன்றம் நடந்திருக்கிறது போல. (உங்களுக்கே இது கேட்டுடுச்சா…?!). மூன்று அணிகளும் இதற்காகப் பேசியிருக்கிறார்கள். தான் பேசியதை நடுவரான சுரேஷ் சரியாகப் புரிந்து கொண்டு மதிப்பிடவில்லை என்பது தாமரையின் புகார். எனவே அவரை அமர வைத்து நிதானமாக விளக்கினார் சுரேஷ் “நாம பண்றதுக்கெல்லாம் கீழே சப்-டைட்டில் வராது. நாமளாத்தான் மக்களுக்குப் புரியற மாதிரி தெளிவா செய்யணும்” என்றெல்லாம் சுரேஷ் பொறுமையாக விளக்க “என்ன இருந்தாலும் நீங்க செஞ்சது தப்பு” என்று ஆத்திரம் அடங்காமல் பொங்கினார் தாமரை.

BB Ultimate

“நீங்கள்லாம் என்ன பேசிட்டு இருக்கீங்க.. ஒண்ணுமே புரியலையே?” என்றபடி அங்கு வந்தார் நிரூப். (எங்களுக்குத்தான் புரியலைன்னு பார்த்தா வீட்ல இருக்கற உங்களுக்குமா?!”). நடுவர் சுரேஷின் தவறான தீர்ப்பு பற்றி மற்றவர்களிடம் சென்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் தாமரை. தனது கிராமத்து நாடக அனுபவம் இவர்களுக்குப் புரியவில்லை என்பது அவரின் ஆதங்கம். “நீங்க.. சினிமால.. ஒரு ஷாட். எடுக்கறதுக்கு.. எத்தனை முறை மாத்தி மாத்தி எடுக்கறீங்க. எவ்ளோ நேரம் ஆகுது.. இங்க வந்துதான் இதையெல்லாம் பார்த்தேன்.. ஆனா கிராமத்து நாடகத்துல அதெல்லாம் செய்ய முடியாது. மேடை ஏறிட்டா. கடைசி வரிசைல இருக்கறவன் வரைக்கும் கத்திப் பேசியாகணும்” என்று அபிராமியிடம் விளக்கினார் தாமரை. (ஷாட் வைக்கறது பற்றியெல்லாம் தாமரை பேசுவதைக் கேட்க சந்தோஷம். நான் வளர்கிறேனே மம்மி!).

அபிராமி

இன்னொரு பக்கம் பாலாவிற்கு வேறு பிரச்சினை. “ரேடியோ டாஸ்க் கொடுத்திருந்தாலும் கூட சதீஷ் கிட்ட பெரிசா மாற்றம் தெரியல. நான் ஏதாவது சொன்னா கோச்சுக்கறாரு.. சொல்றத சொல்லியாச்சு. அவங்க அவங்களுக்கா தெரியணும். வீக் எண்ட்ல மார்க் போடும் போதுதான் நான் பேசப் போறேன். வேற என்ன பண்றதுன்னு எனக்கும் தெரியலை. நீ வேணா சதீஷ் கிட்ட பேசிப் பாரேன்..” என்று சதீஷைப் பற்றி தயங்கித் தயங்கி அபிராமியிடம் பேசினார் பாலா. ஆனால் சதீஷை இந்த ஒரு விஷயத்திற்கு பாராட்டலாம். டெரர் ஆசாமியான பாலாவையே பம்ம வைத்து விட்டதற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. “அவன் நல்ல பையன்தான்.. ஆனா கேம் வேல்யூ தெரியாம இருக்கான்.. நான் பேசிப் பார்க்கறேன்” என்றார் அபிராமி.

ஆரம்பித்தது சண்டைக்கோழி டாஸ்க்

‘கோழி கூவுது’ என்கிற தலைப்பில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘கோழி சாவுது’ என்று தலைப்பு வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு அந்தக் கோழி இம்சைப்படப் போகிறது என்பது அந்தக் கோழிக்கே அப்போது தெரியாது. வீடு கோழிப்பண்ணையாக மாறும். கார்டன் ஏரியாவில் ஒரு பிரம்மாண்ட கோழி நின்றிருந்தது. இதை வைத்து சிக்கன் 65 என்ன.. 650-யே.. செய்யலாம் போலிருந்தது. அப்படியொரு சைஸ்.

டாஸ்க் ஆரம்பித்ததும் பாத்ரூம் ஏரியா தவிர மற்ற ஏரியாக்கள் லாக் செய்யப்படும். கோழி இடும் வெள்ளை முட்டைகளை வைத்துதான் உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை மூன்று அணிகளும் பெற முடியும். இதற்காக ஒவ்வொரு அணிக்கும் தனித்தனி நிறங்களைத் தந்திருந்தார்கள். எதிரணியின் நிறங்களைக் கொண்ட முட்டைகளைக் கைப்பற்றினால் ஸ்பெஷல் சலுகைகளும் தங்க நிற முட்டைகளை எடுத்தால் கூடுதல் சிறப்பு வசதிகளும், வெற்றி வாய்ப்பும் கிடைக்கும் என்று ஆசை காட்டினார் பிக் பாஸ்.

அனிதா

இதற்கான விதிமுறைகளை அனிதா வாசித்துக் கொண்டே போன நேரத்தில், ஒரு சிக்கன் பிரியாணியையே செய்து முடித்து விடலாம் போல. அத்தனை நேரத்திற்கு நீளமான விதிமுறைகளை வாசித்தார் அனிதா. ‘எப்படியும் அடித்துக் கொள்ளப் போகிறார்கள்?! இதற்கு எதற்கு இத்தனை சிக்கலான ரூல்ஸ்?! போட்டியின் நடுவராக சுரேஷ் தாத்தா இருப்பார். இவருக்கு ‘கழுகு’ வேடமாம். வீடு மொத்தமும் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும். இவரிடம்தான் மூன்று கோழி அணிகளும் முட்டையைக் கொடுத்து வசதிகளைப் பெற முடியும்.

நிரூப் செய்த ‘கலீஜ்ஜான’ அழிச்சாட்டியம்

டாஸ்க் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு ‘கலீஜ்’ விளையாட்டு நடந்தது. அனிதாவும் நிரூப்பும் பரஸ்பரம் ஒருவரின் மேல் ஒருவர் நீரைத் துப்பி விளையாடினார்கள். (உவ்வேக்!). இடையில் சுருதியும் எதையோ செய்யப் போக அவர் கையிலிருந்த பீங்கான் தட்டு உடைந்து உணவுப் பாத்திரத்தில் போய் விழுந்ததும் வீடே அமைதியானது. அதுவரை சகித்துக் கொண்டிருந்த ரம்யா இந்தச் சமயத்தில் பொங்கித் தள்ளி விட்டார். “இதென்ன வீடா. என்னது.. எல்லா இடத்திலும் துப்பி வெச்சிருக்கீங்க.. மத்தவங்க நடக்க வேணாமா.. பீங்கான் உடைச்சு வெச்சிருக்கீங்க. கால்ல குத்திச்சின்னா?” என்று ரம்யா பொங்கியதை பெட்ரூமில் ஏரியாவில் படுத்தபடி வரவேற்றார் சுரேஷ். அவருக்கும் இவர்களின் ‘கலீஜ்’ விளையாட்டில் ஆட்சேபம் உண்டு. “பொதுவா ரம்யாவுக்கு கோபம் வராது. அவங்களே கோபப்படறபடி இவங்க நடந்துக்கறாங்க” என்று சதீஷிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

பாலா, தாமரை

வீட்டின் கேப்டனான பாலாவும் வந்து இவர்களின் கலாட்டாவை ஆட்சேபிக்க “ஓகே. ஸாரி. ஸாரி..” என்று சுருதியும் அனிதாவும் இறங்கி வந்தார்கள். ஆனால் இந்தச் சமயத்தில் நிரூப் செய்த காரியம் அநியாயமானது. அவருக்கு பாலாவுடன் ஏற்கெனவே பஞ்சாயத்து இருக்கிற காரணத்தினால் “இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. நாம என்ன வேணுமின்னா பண்ணோம்?. விளையாட்டுல இதெல்லாம் சகஜம்” என்று சப்பைக் கட்டு கட்ட டென்ஷனை அடக்கிக் கொண்டு பாலா பேசியது நன்று. ‘நாமதான் தப்பு செஞ்சோம். அதுக்காகத்தான் இந்த மன்னிப்பு” என்று சுருதி நியாயமாகப் பேசியதால் சற்று சமாதானம் அடைந்து அங்கிருந்து விலகினார் பாலா.

“திருப்பி அடிக்கறதுக்கு ஒரு நிமிஷம் ஆகாது” – உக்கிரமான நிரூப்

கோழி டாஸ்க் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தெரிந்து எல்லோரும் தயாராகி கார்டன் ஏரியாவிற்கு வந்து விட்டார்கள். ஆனால் அனிதா மட்டும் இன்னமும் ஒப்பனை முடியாமல் கண்ணாடியின் முன்பு நின்று கொண்டிருந்தார். “வீட்டுக்குள்ள போங்க’ன்னு பிக்பாஸ் சொன்னால் வெளியே சென்று நிற்பது.. “டாஸ்க் ஆரம்பிச்சாச்சு. வெளியே வாங்க” என்று பிக் பாஸ் சொன்னால், வீட்டிற்குள் நிற்பது என்று… அம்மணி ஒரே ஏடாகூடம்தான். “வெள்ளை முட்டையை விடவும் கலர் முட்டைதான் முக்கியம். ஞாபகம் வெச்சுக்கங்க” என்று தன் அணியினருக்கு டிப்ஸ் தந்து கொண்டிருந்தார் அனிதா. இவரின் அணியில் மூன்று நபர்களுமே பெண்களாக இருப்பது சற்று சிரமத்தைத் தரலாம். பாலா, நிரூப் போன்ற எதிரணி ஆட்களைச் சமாளித்து போராட வேண்டும்.

BB Ultimate

டாஸ்க் ஆரம்பித்து ‘கொக்கரக்கோ’ என்று கோழி சத்தம் போட அனைவருமே பாய்ந்து ஓடினார்கள். எப்படியோ இடையில் புகுந்து இரண்டு வெள்ளை முட்டைகளை சம்பாதித்துக் கொண்டு திரும்பினார் சுருதி. மீதமுள்ளவர்கள் கோழிக்கு பைல்ஸ் ஆப்ரேஷன் செய்யும் ரேஞ்சுக்கு அதிரடி ஆப்ரேஷனில் ஈடுபட, பாவம் அந்தக் கோழி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் துடித்திருக்கும். “தலையவே உள்ள விட்டா மத்தவங்க எப்படி எடுக்கறது?” என்று பாலாவிற்கும் அனிதாவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘ஹய்யோ.. வலிக்குதே’ என்றெல்லாம் அனத்தாமல் வீரமாகப் போராடினார் அனிதா. பரவாயில்லை..

அடுத்த முறை கோழி கத்தியதில் மக்கள் மறுபடியும் பாய்ந்தார்கள். இந்தச் சமயத்தில் பாலாவின் முழங்கை நிரூப்பின் முகத்தில் இடித்தது. அவர் விளையாட்டு மும்முரத்தில் செய்தது போல் தோன்றினாலும் நிரூப்பை தடுக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே செய்ததை வீடியோவில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. “அடிக்கற வேலைலாம் வெச்சுக்காதே.. அது தப்பு. பதிலுக்கு சப்புன்னு அறைஞ்சுடுவேன்” என்று பாலாவை நோக்கி ஆத்திரத்துடன் கத்தினார் நிரூப். இந்த சீசனில் இதுவரை அமைதியைக் காப்பாற்றிய நிரூப், தன்னை மறந்து ஆத்திரத்தில் வெடித்த முதல் தருணம் இது. “எங்க.. அறைடா.. பார்க்கலாம்..?!” என்று வந்து பாலாவும் வந்து முறைத்துக் கொண்டு நிற்க, தாமரை உள்ளிட்டவர்கள் பதறிச் சென்று இருவரையும் விலக்கினார்கள்.

ரம்யா பாண்டியன்

“நான்தான் முட்டையை முதல்ல தொட்டேன்..” என்று ஒருபக்கம் நிரூப் முறையிட “நான்தான் முதல்ல எடுத்தேன்” என்று இன்னொரு பக்கம் பாலா மல்லுக்கட்ட என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினாலும் நிலைமையை நன்றாகச் சமாளித்தார் சுரேஷ். ஒரு கட்டத்தில் “அந்த முட்டை உன்னோடதுதான்” என்று நிரூப்பிற்கு சாதகமாக தீர்ப்பளித்தார். முதல்ல தொட்டவனுக்கு வெற்றியா? எடுத்தவனுக்கு வெற்றியா?.. “கோழி முதல்ல வந்ததா.. முட்டை முதல்ல வந்ததா..” என்னும் கேள்விக்கு நிகரான குழப்பம் இது.

“பதிலுக்கு அடிக்கறதுக்கு ஒரு நிமிஷம் ஆகாது” என்று நிரூப் மறுபடியும் ஆத்திரத்தில் குமுற “தள்ளுமுள்ளுல இதெல்லாம் சகஜம்.. வேணுமின்னு யாராவது அடிப்பாங்களா?” என்று பாலா சொன்னதும் ஒருவகையில் நியாயம் போலத்தான் தெரிந்தது. இந்தப் பஞ்சாயத்தின் இடையில் “கழுகு சார்.. நான் என்ன சொல்றன்னா..” என்று சுரேஷை பாலா அழைத்தது காமெடி.. ‘குற்றம். நடந்தது என்ன?’ என்பதை அறிவதற்காக க்ரைம் சீனை நேரடியாக சென்று பார்வையிட்டார் நடுவர் சுரேஷ்.

“கோழியை சாகடிச்சிடாதீங்க” – பிக் பாஸின் காமெடி

இந்தச் சமயத்தில் பிக் பாஸ் குறுக்கிட்டு செய்த அறிவிப்பு இருக்கிறதே.. அட்டகாசமான காமெடி. மூன்று அணியும் முட்டைக்காக கோழியை விதம் விதமாக பலவந்தப்படுத்துவது குறித்து பிக் பாஸ் டென்ஷன் ஆகி இருக்க வேண்டும். “முட்டை கீழ விழற வரைக்கும் நீங்க வெயிட் பண்ணனும். அது மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கையை உள்ளே விட்டு இம்சை பண்ணா. கோழி செத்துடும்” என்று சர்காஸ்டிக்கான குரலில் பிக் பாஸ் எச்சரிக்க “சபாஷ். சரியான தீர்ப்பு” என்று மகிழ்ந்தார் சுரேஷ். “பாவம்யா. அந்தக் கோழி” என்று ஒரு கழுகே கோழிக்காக வருத்தப்படும்படி ஆனது நிலைமை. அந்த அளவிற்கு ரணகளமான பிரசவத்தை போட்டியாளர்கள் நிகழ்த்தினார்கள்.

“சேதமான முட்டைகளை கணக்கில் சேர்க்க முடியாது.. எதுக்கும் பிக் பாஸ் தீர்ப்பு சொல்லட்டும். அது வரைக்கும் அதை தனியா வெக்கறேன்” என்று எச்சரிக்கையாக சேஃப் கேம் ஆடினார் சுரேஷ். ‘முட்டை கீழே விழும் வரை காத்திருங்கள்’ என்பதுதான் பிக் பாஸின் அறிவிப்பு. கைப்பற்றும் சண்டையில் ஏதாவது சிறிது சேதம் ஏற்பட்டால் அதை ஒதுக்கி விட முடியாது என்றுதான் தோன்றுகிறது. பார்ப்போம்.

அனிதா, நிரூப்

ஒரு நல்ல நண்பனாக நின்ற அனிதாவிற்கு பாராட்டு

பாலாவுடன் நிகழ்ந்த மோதல் காரணமாக இன்னமும் டென்ஷன் குறையாமல் இருந்தார் நிரூப். ஆட்டத்தில் இது நன்கு பிரதிபலித்தது. இந்தச் சமயத்தில் அனிதா செய்த விஷயத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். சிக்கலான நேரங்களில் ஒரு நல்ல நண்பனின் ஆதரவு எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தியது அனிதாவின் செயல். நிரூப் எதிரணி ஆசாமியாக இருந்தாலும் கூட, அவரிடம் ஓடிச் சென்று காதோரமாக பேசினார் அனிதா.

சுரேஷ், நிரூப்

“பாலாவோட கை விளையாட்டு மும்முரத்துல கூட பட்டிருக்கலாம். இதைப் பஞ்சாயத்து ஆக்கினா கேஸ் நிக்காது. இந்த benefit of doubt-ஐ அவனுக்கு தந்துதான் ஆகணும்.. வேற வழியில்ல. டாஸ்க் முடியற வரைக்கும் இந்த விஷயத்தை மைண்ட்ல வெச்சுக்காத. தூக்கிப் போட்டுட்டு ஃபோகஸ் பண்ணி விளையாடு… அப்புறம் பேசிக்கலாம்.. முகத்தை தொங்கப் போட்டுட்டு டல்லா இருக்காத” என்று நிரூப்பிற்கு அனிதா செய்த உபதேசம் மிகச்சரியானது. வெல்டன் அனிதா!

நாளை வரைக்கும் அந்தக் கோழி உயிரோடு இருக்கிறதா என்று பார்க்கலாம். அது முட்டையிட்டால்தான் டாஸ்க்கே தொடரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.