''வெளியே சொல்லமுடியாத பல விஷயங்கள் இருக்கின்றன'' – மனம் புழுங்குகிறார் துரை வைகோ

அண்மையில் சென்னையில் நடைபெற்ற ம.தி.மு.க-வின் 28-வது பொதுக்குழுக் கூட்டத்தில், ‘தலைமைக் கழக செயலாளராக’த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் துரை வைகோ. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மகனான துரை வைகோவை கட்சியின் முக்கியப் பொறுப்புக்குத் தேர்வு செய்யக்கூடாது என தொடர்ச்சியாகவே அந்தக் கட்சியிலுள்ள நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில், அவர்களது எதிர்ப்பை மீறி, பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தேர்வாகியிருக்கிறார் துரை வைகோ.

இதையடுத்து, துரை வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துப் பேசினேன்…

”கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ம.தி.மு.க உயர் மட்டக்குழுக் கூட்டம், தற்போதைய பொதுக்குழுக் கூட்டம் இரண்டிலுமே உங்களுக்கு எதிராக ‘வாரிசு அரசியல்’ குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?”

”கடந்த ஆண்டே கட்சியின் உயர் மட்டக்குழுவில் மறைமுகத் தேர்தல் நடத்தி, ‘தலைமைக் கழக செயலாளராக’ என்னைத் தேர்வு செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் இந்தத் தேர்வினை அங்கீகரித்து ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள்.

ம.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம்

கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் போன்ற அதிகாரமிக்க பொறுப்புகளுக்கான நபர்களை பொதுக்குழு மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். ஆனால், ‘தலைமைக் கழக செயலாளர்’ என்ற பொறுப்பு குறிப்பிட்ட அதிகார வரம்பைக் கொண்டது மட்டுமே. எனவே, ம.தி.மு.க பொதுச்செயலாளரேகூட நேரடியாக இந்தப் பொறுப்புக்கான நபரை நியமனம் செய்துவிட முடியும்.

ஆனாலும்கூட, தலைவரின் மகன் என்பதாலேயே தேர்வு செய்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சியின் உயர் மட்டக்குழுவில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வையும்கூட வெளிப்படையாக நடத்தியிருக்க முடியும். ஆனால், எனக்கு எதிராக வாக்களித்தவர்கள் யாரென்று வெளிப்படையாகத் தெரிய நேரிட்டால், கட்சியில் அவர்களைக் கட்டம் கட்டிவிடுவார்கள் என்ற சர்ச்சை எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அந்த உயர்மட்டக் குழுவில், 106 பேர் கலந்துகொண்டனர். அதில் 104-பேர் ஒருமனதாக என்னை ‘தலைமைக் கழக செயலாளராக’த் தேர்ந்தெடுத்தனர். 2 பேர் மட்டும் எனக்கெதிராக வாக்களித்திருந்தனர். இந்தத் தேர்வினையடுத்து, தற்போது கூட்டப்பட்ட பொதுக்குழுவிலும் உறுப்பினர்கள் அனைவரும் என்னை ஒருமனதாக அங்கீகரித்து ஒப்புதல் வழங்கியிருக்கின்றனர்.”

”வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட ம.தி.மு.க-விலேயே வாரிசு அரசியல் வந்துவிட்டது என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில்தான் ‘வாரிசு அரசியல்’ என்றெல்லாம் கட்சிக்கு எதிராக சிலர் பேச ஆரம்பித்திருக்கின்றனர். இது வாரிசு அரசியல் அல்ல என்பதற்கான விளக்கத்தை ஏற்கெனவே பலமுறை நான் தெளிவாக விளக்கிவிட்டேன்.

அப்பாவின் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையின் காரணமாகத்தான் நான் அரசியலுக்குள் வர நேரிட்டது. அதன்பிறகு 2019 தேர்தலில் என்னுடைய செயல்பாடுகளை கூட்டணிக் கட்சித் தலைமையேகூட பாராட்டி ஊக்கப்படுத்தியது. கட்சித் தொண்டர்களும்கூட ‘வைகோ தலைமையில், 28 ஆண்டுகளாக கட்சி திறம்பட செயல்பட்டு வருகிறது. ஆனால், நீங்களும் அவரோடு துணையாகப் பயணிக்கவேண்டும்’ என்று அன்போடு கேட்டுக்கொண்டனர்.

துரை வைகோ – வைகோ – ஸ்டாலின்

ஆனாலும்கூட நான் அரசியலுக்குள் வருவதை பிடிவாதமாக மறுத்துவிட்டார் அப்பா. நானுமே நேரடி அரசியலுக்குள் வரவிரும்பவில்லை…. எனவே தொண்டர்கள் தொடர்ச்சியாக என்னை வற்புறுத்தியபோதும்கூட, மறுத்துப் பேசிவந்தேன்.

ஒருகட்டத்தில், எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி, கட்சிக்காக உழைத்துவரும் தொண்டர்களின் மனநிலையும் நம்மீது அவர்கள் காட்டிவரும் அன்பும் எனக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எப்படி கல்யாணத்துக்குப் பின்பு ஓர் ஆண், ‘குழந்தை, குடும்பம்’ என்று பொறுப்பான மனநிலைக்கு மாறிவிடுகிறானோ அதே போன்று, அரசியலுக்குள் வந்தபிறகு தொண்டர்களின் அன்பும் அவர்களது நம்பிக்கையையும் காப்பாற்றியாக வேண்டிய பொறுப்பு எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. ஆக, தொண்டர்களது விருப்பத்தின் பேரிலேயே நான் அரசியலுக்குள் வந்தேனே தவிர… இது வாரிசு அரசியல் அல்ல!”

”28 வருடங்கள் கட்சிக்காக பல தியாகம் செய்தவர்களை, பொடா சிறைவாசம் அனுபவித்தவர்களை, உங்களை எதிர்த்துவிட்டார்கள் என்பதற்காக ‘துரோகி’ என்கிறீர்களே…?”

”உண்மைக்குப் புறம்பாக செயல்படுபவர்களையும், கட்சித் தலைமைக்கு எதிராகப் பேசிவருபவர்களையும்தான் பொதுவாக ‘துரோகி’ என்று சொல்கிறோம். மற்றபடி யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எதனால் இவர்கள் இப்படிப் பேசிவருகிறார்கள் என்ற காரணங்களை ஏற்கெனவே உங்களிடம் நான் வெளிப்படையாக சொல்லிவிட்டேன். இன்னும் நாங்கள் வெளியே சொல்லமுடியாத பல விஷயங்களும் இருக்கின்றன.

பொடாவின்போது நம்மோடு சிறைவாசம் அனுபவித்தவர் என்ற காரணத்துக்காகவே தனிப்பட்ட முறையில் அவரது வாழ்வாதாரத்துக்குத் தேவையான பல உதவிகளை வைகோ செய்திருக்கிறார். அதையெல்லாம் வெளியில் சொல்வது நாகரிகம் கிடையாது. அடுத்து, இப்படியெல்லாம் அதிருப்தி தெரிவித்து வந்தாலும்கூட கட்சிக் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு இவர்களுக்கு பலமுறை அழைப்பு விடுத்திருக்கிறார் வைகோ. அவர்களை சமாதானப்படுத்தும்விதமாக நானும்கூட நேரிலேயே சென்று பேசியிருக்கிறேன். ஆனாலும்கூட கடந்த ஒன்பது மாதங்களாக கட்சி நிகழ்ச்சி எதிலும் இவர்கள் கலந்துகொள்வதில்லை.

செவந்தியப்பன்

மூன்று மாதங்களுக்கு முன்பு, ‘கட்சியின் சட்ட திட்டங்கள் பற்றிய விவரம் வேண்டும்’ என்றுகூறி பதிவுத் தபாலில் வைகோவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. நேரடியாகக்கூட வைகோவிடம் இதுகுறித்துப் பேசியிருக்கலாம். ஆனால், இந்த நோட்டீஸின் ஒரு பிரதியை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியிருக்கிறார்கள். அடுத்து, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, கட்சித் தலைமை அனுமதி பெறாமலேயே என்னைக் கொடியேற்றச் சொல்லி கட்டாயப்படுத்திய ஒருவரும்கூட இன்றைக்கு எங்களுக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆக இப்படியெல்லாம் வில்லங்கமாக செயல்படுபவர்களை என்னவென்று சொல்வது?

கடந்த வருடம் என்னை இந்தப் பொறுப்புக்கு தேர்ந்தெடுத்த உயர் மட்டக்குழு கூட்டத்தின்போதும்கூட, திருப்பூர் அருகே இந்த ஐந்து பேரும் ஒன்றுகூடி, கட்சியைப் பற்றியும் வைகோவைப் பற்றியும் பல அவதூறு கருத்துகளைப் பரப்பினர். ‘இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனச்சொல்லி சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகளே தீர்மானம் இயற்றி வைகோ கவனத்துக்கும் கொண்டுசென்றுவிட்டனர். ஆனாலும் வைகோ இன்னும் நடவடிக்கை எடுக்காமல், மன வேதனையோடு பொறுமை காத்து வருகிறார். இந்த விஷயத்தில் நான் உணர்ச்சி வசப்பட்டால்கூட, ‘அரசியல் என்றால் இப்படித்தான் இருப்பார்கள்… நாம்தான் பொறுமைகாக்க வேண்டும்’ என்றுதான் வைகோ எனக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்.

ஆக, வயது முதிர்வு, உடல்நலப் பிரச்னைகளோடு இருந்துவரும் வைகோவுக்கு இந்த நேரத்தில் ஊன்று கோலாக இருக்கவேண்டியவர்களே… ஊன்றுகோலைப் பிடுங்கும் வேலையைச் செய்துவந்தால்… யார் துரோகி என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!”

புலி வாலைப் பிடித்துவிட்டேன் என்கிறீர்கள். அரசியலை விட்டு நீங்கள் ஒதுங்கினால், அப்படி என்ன ஆபத்து வந்துவிடப்போகிறது?”

”ம.தி.மு.க எனும் இந்த இயக்கம், தலைமை, நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரது நலனையும் காக்கின்ற பொறுப்புமிக்க இடத்தில் நான் நிற்கிறேன். தாய் அல்லது தந்தை ஸ்தானத்துக்கு வந்துவிட்ட ஒருவரது மனநிலை எந்தளவு பொறுப்புமிக்கதாக மாறிவிடுமோ… அதுபோன்றதொரு உணர்வு இது!

எனவே, என்னையும் அறியாமல், நானே விரும்பாமல் சூழ்நிலையினாலும் தொண்டர்களின் விருப்பத்தினாலும் அரசியல் என்ற இந்தப் புலிவாலைப் பிடித்துவிட்டேன்… அதன் தொடர்ச்சியாக பொறுப்புமிக்க ஒரு தாயின் மனநிலைக்கும் மாறிவிட்டேன். இனி நானே நினைத்தாலும்கூட, என்னால் இந்த அரசியலை விட்டுவிட முடியாது!”

வைகோ

”தலைமைக் கழகச் செயலாளர் என்ற இந்தப் பதவி அடுத்தடுத்த நாLகளில் ‘ம.தி.மு.க பொதுச்செயலாளர்’ என்ற கட்டத்தை நோக்கி நகரும்தானே?”

”அதை நான் முடிவு பண்ண முடியாது. வரும் காலங்களில் என்னை நான் மேம்படுத்திக்கொள்கிற வகையில், என்னுடைய செயல்பாடுகளும் அவை தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தப்போகிற தாக்கங்களையும் பொருத்தது. எனவே, முழுக்க முழுக்க இது தொண்டர்களின் கைகளில்தான் இருக்கிறது!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.