இறம்பொடை நீர்வீழ்ச்சியில் காணாமல் போன, மூவரில் யுவதியொருவரின் சடலம் மீட்பு

நுவரெலியா இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில் யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.

காணாமற் போயுள்ள ஏனைய யுவதி மற்றும் இளைஞனின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு,  நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தனர்

இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு இளைஞர், யுவதிகள் குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.

7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென நீர்வீழ்ச்சி – ஆற்றுப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்ததால் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கூக்குரல் எழுப்ப, அப்பகுதியில் இருந்து சிலர் வந்துள்ளனர்.  4 யுவதிகளை அவர்களுடன் சென்ற இளைஞர்கள் காப்பாற்றி கரைசேர்த்துள்ளார். ஏனைய இரு யுவதிகளையும் காப்பாற்ற முற்பட்டவேளையிலேயே மூவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொத்மலை பொலிஸார், நுவரெலியா மாவட்ட இராணுவ முகாமின் இராணுவத்தினர், கடற்படை சுழியோடிகள்  மீட்பு பணிகளை ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று (13.04.2022) காலை யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் சடலம் கற்பாரையொன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி யுவதியின் சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சடலத்தை கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.