தொடரும் மின்வெட்டு.. மின் அலுவலகம் மீது மர்மநபர்கள் கல்வீச்சு; பாதுகாப்பு கோரும் ஊழியர்கள்

ஆரணி பகுதியில் தொடரும் மின்வெட்டு காரணமாக மின்சார அலுவலகத்தில் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதனால் அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல் நிலையத்தில் மின்சார ஊழியர்கள் புகாரளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கண்ணமங்கலம், களம்பூர், சந்தவாசல், படவேடு, தேவிகாபுரம், விண்ணமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து 2 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொது மக்களும் விவசாயிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலும் இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படுவதால் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
image
இதனால் விரக்தி அடைந்த ஆரணி பகுதியை சேர்ந்த மக்கள் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மின்சார அலுவலகம் மற்றும் மின்பாதை மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மீது நேற்று இரவு கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பணியிலிருந்த மின்சார அலுவலக ஊழியர்கள், மின் அலுவலகத்தின் கதவை பூட்டி ஆரணி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
image
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் பாதுகாப்புக்காக சென்று விசாரணை செய்துள்ளனர். ஆரணி மின்சார உதவி செயற்பொறியாளர் தரப்பில், `ஆரணி மின்சார அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவதால் மின்சார அலுவலகத்திற்கும் மின் மாற்றி மின் கருவிகள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு வழங்கவும்’ என ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்தி: `தமிழ்நாட்டுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க உதவிசெய்க’ – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.