கடந்த 3 ஆண்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஜனநாயகத்தின் புதிய உதாரணம் காஷ்மீர்: ரூ.20 ஆயிரம் கோடி நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேச்சு

ஜம்மு: ‘கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் மூலம் ஜம்மு காஷ்மீர் ஜனநாயகம் மற்றும் உறுதிப்பாட்டின் புதிய உதாரணமாகி உள்ளது’ என ₹20 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் உள்ள பாலியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று ஜம்மு சென்றார். காஷ்மீரில் கடந்த 2019ம் ஆண்டு சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் காஷ்மீர் பயணம் இது. இதனால்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.பாலி கிராமத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கு ₹20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார். ₹3,100 கோடியில் பனிஹல்-காஜிகுண்ட் சாலை சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார். ₹7,500 கோடி மதிப்பில் டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச்சாலையை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பாலி கிராமத்தில் 3 வாரத்தில் கட்டப்பட்ட 500 மெகாவாட் சோலார் மின் நிலையத்தை தொடங்கி வைத்தார். மேலும், நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டையொட்டி, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர் நிலைகளை உருவாக்கும் ‘அம்ரித் சரோவர்’ இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பாலி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றபடி, நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவது, ஒரு மிகப்பெரிய மாற்றத்தை குறிக்கிறது. இங்கு ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி, இங்கிருந்து அனைவருடனும் தொடர்பு கொள்வது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். ஜம்மு காஷ்மீரில் ஒன்றிய அரசின் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு பயனளித்து வருகின்றன. இதன் மூலம் இன்று ஜனநாயகத்தின் புதிய உதாரணமாக காஷ்மீர் விளங்குகிறது. சோலார் மின் நிலையம் மூலம் பாலி கிராம பஞ்சாயத்து கார்பன் இல்லாத நாட்டின் முதல் பஞ்சாயத்தாக சாதனை படைத்துள்ளது.கடந்த 3 ஆண்டில் இங்கு வளர்ச்சியின் புதிய பரிணாமங்கள் ஏற்பட்டுள்ளன. இது விரைவான வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்து, ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இங்கு ₹17000 கோடிக்கு முதலீடுகள் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டில் தனியாரிடமிருந்து ₹38,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. பல தனியார் முதலீட்டாளர்கள் ஜம்மு காஷ்மீருக்கு வர ஆர்வமாக உள்ளனர். பல ஆண்டாக இங்கு அமல்படுத்தப்படாமல் இருந்த ஒன்றிய சட்டங்கள் மூலம் இன்று காஷ்மீர் மக்கள் அதிகாரம் பெற்றுள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.குண்டுவெடிப்பா? விண்கல் விழுந்ததா?: பிரதமர் மோடி வர இருந்த நிலையில், ஜம்முவின் புறநகரான பிஷ்னன் பகுதி லலியன் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மிகப்பெரிய வெடிசத்தம் கேட்டது. இதனால் நிலத்தில் பள்ளம் ஏற்பட்டது. அங்கு வெடிகுண்டு வெடித்ததாக பரபரப்பு நிலவியது. விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள், விண்கல் விழுந்திருக்கலாம் அல்லது இடி, மின்னல் தாக்கியதில் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, குல்கம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.