விளையாட்டு சங்கத்தில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை?! உயர்நீதி மன்றம் கடும் காட்டம்

சென்னை: விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை என சென்னை உயர்நீதி மன்றம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.

தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்கத் தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வட்டெறிதல் வீராங்கனை நித்யா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரணை நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் விசாரணையைத் தொடர்ந்து வழங்கிய தீர்ப்பில், விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை நியமிக்கக் கூடாது எனவும்  உத்தரவிட்டிருந்தார்

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தரப்பில் அதன் செயலாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, ஏற்கனவே தனி நீதிபதி வழங்கிய உத்தரவில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியதுடன், விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன தொடர்பு என்றும் விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை அவர்கள் பறித்துச் செல்லவே விளையாட்டு சங்கங்களுக்குள் நுழைகின்றனர் என வேதனை தெரிவித்தனர்.

மேலும் மாநிலத்தின் அணிக்காகவும், மாநிலத்துக்காகவும், தேசத்துக்காகவும் விளையாடும் வீரர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும், போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் வீரர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை என மத்திய, மாநில அரசுகளை சாடியதுடன்,  பயிற்சியாளர்களின் நடத்தை குறித்து நீதிமன்றத்தில் கூற முடியவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை, விளையாட்டு சங்கங்களுக்குத் தலைவராக ஏன் நியமிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்கள் ஏன் இச்சங்கங்களில் நுழைய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.